பக்கம் எண் :

கட்சி அரசியல் 115

பகையுணர்ச்சிகள், வெறுப்புக்குரல்கள், போராட்ட ஆரவாரங்கள், கல்லடிகள்,
கொள்ளைகள், கொலைகள் எல்லாம் நடைபெறும் காலம் அது.
இவ்வளவுக்கும் அடிப்படைக் காரணம், கட்சியின் பெயரால் மனச்சான்று
வெளிப்படாதவாறு மக்களை நடத்தும் முறையே ஆகும்; மக்கள் கருத்துரிமை
இழந்த பிறகு, கட்சிக்கு அடிமைகளாய் ‘ஒன்றைப்பிடி, உறுதியாய்ப் பிடி'
என்று கண்மூடிகளாய்ப் பொறுமை இல்லாமல் வெறிகொண்டு திரளும்
முறையே ஆகும். கூட்டங்களின் அளவில் இந்தக் கட்சிப்பகை நிற்பதில்லை.
சிற்றூர்களில் அமைதியாக வாழ்ந்து ஒன்றுபட்டிருக்கின்றவர்களும் தேர்தல்
காலத்தில் பிளவுபட்டுக் குழப்பத்திற்கிடையே நிற்பார்கள்; தொழிற்சாலைகளில்
பிரிவுகள் அலைக்கும்; தெருப்பேச்சுகளிலே பூசல்கள் புகுந்து நலியும்;
சுற்றத்தாரிடையே கட்சி காரணமாகப் பகை வளரும்; நண்பர்களின் நடுவில்
வேற்றுமை மலியும்; குடும்பங்களும் குலைந்து வருந்தும். இவ்வளவுக்கும்
காரணமாகக் கட்சித் தேர்தல் நடந்து நாட்டில் மக்களின் உரிமையை எல்லாம்
பறித்து ஒரு கட்சியாரிடம் கொடுத்து ஒதுங்கும்.

     தகுதித் தேர்தலில் இவ்வளவுக்கும் இடமில்லை. இரண்டாயிரம் மக்கள்
வாழும் ஒவ்வோர் ஊரிலும் ஓர் ஊர் மன்றம் என்றால், ஐந்து பேரை
அல்லது ஏழுபேரை அந்த இரண்டாயிரம் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவர்களுக்குள்ளும் பொறாமை, பகை, போட்டி இவை ஓரளவு இருக்கலாம்.
ஆனால் இவற்றை வெளியார் மிகுதிப்படுத்த முடியாது. ஏன் என்றால், அந்த
ஊரார் (நகரமாயின் நகரத்துப் பகுதியார்) ஒருவர் ஒருவரை முன்னமே
அறிந்திருப்பவர்கள். புதிதாக யாரும் ஒன்றும் சொல்வதிற்கில்லை.
சொன்னாலும் கூட்டம் குறைவாகையால், குழப்பத்தைப் பெருக்க வழி இல்லை.