பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டுமே என்ற நேர்க்காரணம் புலப்படுகின்றது அல்லவா? ஒரு சில தலைவர் மேல் சினமும் ஆத்திரமும் கிளம்பிக் கத்தியையாவது துப்பாக்கியையாவது மறைத்துத் திரிய வேண்டிய கொடுமை இல்லை. திருந்தாத மக்களைத் திருத்த வேண்டும் என்ற முயற்சியும், திருத்த முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கும்போது, ஏமாற்றத்திற்கு இடம் இல்லை அல்லவா? பெரும்பாலோர் விரும்புகின்றார்கள். ஆனாலும் அமைச்சர்கள் கேட்கவில்லையே என்ற ஆத்திரம் வேறு. நாம் உணர்வதுபோல் பெரும்பாலோர் விரும்பவில்லையே, விரும்பினால் அமைச்சர்கள் மாறி விடுவார்களே என்ற ஆவல் வேறு. ஆகையால் இந்தத் தேர்தல் முறை ஒருநாளும் மனிதனை விலங்காக மாற்றுவதும் இல்லை; மனச்சான்றைக் கொன்று அறத்தைத் தாழ்த்துவதும் இல்லை. ஆனால் ஒருவகைத் தயக்கம் ஏற்படலாம். நினைத்த போதெல்லாம் அமைச்சர் குழு மாறிக்கொண்டிருந்தால் நாட்டில் நிலைத்த அரசியல் ஏற்படாதே என்று தயங்கலாம். அது தவறான கருத்து. கட்சித் தேர்தலின் வழியாக மேலே சென்று அமைச்சரானவர்கள், பொது மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையால் அடக்கு முறையைக் கையாள இடம் இருக்கின்றது. ஆனால் இவ்வாறு மக்கள் தகுதித் தேர்தல் வாயிலாகச் சிறு மன்றங்களை அசைத்தால் நாமும் அசைந்து விழுவோம் என்று அறிந்தால், பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சிறு சிறு கிராமங்களின் நன்மையையே எப்போதும் மனத்தில் நாடி, ஊர் மன்றங்களைப் போற்றி நடப்பார்கள். ஆகையால் மாறுதலுக்கு அடிக்கடி |