பணமே தவிர மக்களின் உடல் நலம் அல்ல என்று கருதும் பொறுப்பற்ற தன்மை இவ்வளவும் காரணம் அல்லவா? அதே வியாபாரி பங்கீடு எடுபட்டபின் பழையபடி நல்ல அரிசி வாங்கிச் சேர்த்துப் பொதுமக்களின் ஆதரவையும் அன்பையும் நாட வில்லையா? இப்படித்தான் கட்சித் தேர்தல் நல்ல அமைச்சர்களையும் கெடுத்துப் பொல்லாத அதிகாரிகளாக, பொறுப் பற்றவர்களாக, உணர்ச்சி அற்றவர்களாக மாற்ற வல்லது. ஆனால் தகுதித் தேர்தலோ பொதுமக்களின் நல்வாழ்வையே குறிக்கோளாகக் கொள்ளச் செய்து தன்னலம் உடையவர்களையும் பொதுமக்களின் உண்மை ஊழியர்களாக, தொண்டர்களாக மாற்ற வல்லது. பகை உணர்ச்சி பகையுணர்ச்சி கொலைக் கருவிகளைவிடப் பொல்லாதது; திருத்த முடியாது என்று தெரிந்த பிறகு பதவியில் உள்ளவர்களைப் பகைக்கும் நிலைமை மக்களுக்கு ஏற்படுகின்றது. அந்தப் பகை எண்ணத்தளவில் நிற்கும்போது நாட்டில் பெரிய புரட்சி ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் செயலளவில் நிகழும் போது நாடு முழுவதும் விழித்து அலறுகின்றது. இதனால் செயல் பொல்லாதது என்று எல்லோரும் கலங்குகின்றார்கள்; ஆனால், எண்ணத்தளவில் நின்ற பகையுணர்ச்சியோ அதைவிடப் பொல்லாதது என்பதை மறக்கக் கூடாது. கொலை முதலிய கொடுஞ் செயல் நேர்ந்தபோது உடனே நாட்டினர் எல்லோரும் அந்தச் செயல் செய்தவர்களைப் பழிக்கின்றார்கள்; கொடுஞ்செயல் செய்தவர்களும் வருந்துகின்றார்கள்; அறத்தின் சிறப்பை அவர்களுடைய மனச்சான்றும் உணர்த்துகின்றது. ஆகையால் அந்தக் |