பக்கம் எண் :

124அறமும் அரசியலும்

கொடுமை ஒரு வகையில் அறத்தை நிலைநாட்டுவதற்கே பயன்படுகின்றது.

     ஆனால், செயலளவில் வாராமல் எண்ணத்தளவில் நிற்கும்
பகையுணர்ச்சியோ நின்று வேலை செய்கின்றது. அறத்திற்கு நேர்மாறான
வழியில் இழுத்துச் செல்கின்றது. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக ஆள் திரட்டும்
முயற்சியில் ஈடுபடுகின்றது. பொதுமக்களின் மனத்தை மாற்றுவதற்காகப் பொய்
விதைக்கின்றது; புறங்கூறுவதைக் கலை ஆக்குகின்றது; ஆக்க வேலையை
மறக்கின்றது; அழிவு வேலைகளுக்குத் தூண்டுகோல் செய்கின்றது; அன்பு,
இன்சொல், இரக்கம் முதலிய நல்ல பண்புகளால் பயனில்லை என்று
உணர்த்துகின்றது; இவைகள் கோழையின் பண்புகள் என்றும், நாட்டு
நன்மைக்கு உதவாதவைகள் என்றும் உணர்த்துகின்றது. பகை, வன்சொல்,
சினம், வெறுப்பு, கடுமை முதலியவைகளை வீரம், ஆண்மை முதலிய
பெயர்களால் விளங்கச் செய்து தீநெறியை வளர்க்கின்றது. எதிர்கட்சியார்
நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒத்திருந்தாலும், ஒவ்வாத பத்து பங்கையே
எடுத்தெடுத்துப் பேசி வேறுபாட்டையே விளக்கமாக்கிப் பகை
மனப்பான்மையை வளர்க்கச் செய்கின்றது. எதிர்கட்சியார் காக்கை கறுப்பு
என்று சொன்னாலும் அவர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காகவே, வேறு
வேறு காரணங்களை மூளை கொண்டு கற்பித்துக் காக்கை கறுப்பு அல்ல
என்று மறுத்து முழங்கச் செய்கின்றது. எதிர்கட்சிப் பத்திரிகைகள் எழுதுகின்ற
அத்தனையும் மறுத்து அவற்றிற்கெல்லாம் முரணான செய்திகளையே எழுதி
எழுதிச் சாதிக்கும்படி பத்திரிகைகளை நடத்தச் செய்கின்றது. தம் குணமும்