எல்லோரும் அறிவும் பொறுப்பும் உள்ள மக்களாக விளங்கும் நாள் இன்னும் வரவில்லை. அதனால் தான், குடியாட்சி என்னும் ஜனநாயகம் இன்னும் குறையுற்றே வருகின்றது. முடியாட்சியும் தடியாட்சியும் உலகம் தோன்றிய நாள்முதல் இன்றுவரையில் எங்கேனும் ஓர் இடத்திலாவது இருந்து வருகின்றன. குடியாட்சி அமையும் தகுதி வரும் வரையில் உலகம் காத்திருக்காது. ஆகையால் இந்த இடைப்பட்ட நிலைமையில் அறிஞர் ஆட்சி வேண்டியதாக உள்ளது. அந்த அறிஞர் ஆட்சியில்தான் கட்சிப் பிணக்கும் பூசலும் போரும் மலிகின்றன. இந்தப் பிணக்கும் பூசலும் போரும் கண்டு மக்கள் சோர்ந்து நிற்கும் நிலையில் தடியாட்சி இடம் பெற்றுவிடுகின்றது. முடியாட்சியைப் போலவே தடியாட்சியும் கட்சியற்றது. தடியாட்சி உள்ள நாட்டில் ஒரு கட்சி தான் தெருவில் உலவ முடியும். மற்றொரு கட்சி சிறைக் கம்பிகளுக்கு உள்ளே அடங்கிக் கிடக்க வேண்டும்; அல்லது நாடு கடந்து வெளியேற வேண்டும்; அல்லது வாழ்வைத் துறக்க வேண்டும். அப்போதும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து அமைதியாக இருப்பது உண்டு. கட்சிப் பிணக்கும் பூசலும் இல்லாதது கண்டு தடியாட்சியே ஒரு வகையில் நல்லது என்று ஆறுதல் அடைவதும் உண்டு. குழந்தை நடை கற்கும்போது தட்டுத் தடுமாறி விழுவது இயல்பே. ஆனால் அதற்காகக் குழந்தையின் நடையைத் தடைப்படுத்துவது அறமா? தடைப்படுத்தினாலும் எத்தனை நாள் அந்தத் தடை நிற்க முடியும்? இயற்கையின் ஆணை வீண்போகுமா? அந்தக் |