குழந்தை எப்படியும் நடை கற்றுக் கொள்ளும்; நடந்தே தீரும். அப்படியே தடியாட்சி சிறிது காலம் இருந்தாலும், குடியாட்சி ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறு குடியாட்சி ஏற்படுகின்ற வரையில் இருவகைக் கட்சி இருந்தே தீரும். இரண்டுக்கு மேற்பட்ட பல கட்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கங்களைக் கருதி இருவகையாகவே பகுத்துக் கொள்ளலாம். ஒருவகைக் கட்சியார் இன்றைய வெற்றியை பெரிதாகக் கொண்டு உண்மையை ஒத்திவைப்பார்கள். மற்றொரு வகையார், நாளைய நன்மையைக் கருதி வெற்றியை ஒத்தி வைப்பார்கள். சுருங்கக் கூறினால், ஒருவகையார் நிகழ் காலத்தில் நாட்டம் உடையவர்கள், இன்றைக்கு என்பவர்கள். மற்றொரு வகையார் எதிர் காலத்தில் நாட்டம் உடையவர்கள் நாளைக்கு என்பவர்கள். இருவகையாரும் நன்மையை விரும்புகின்றவர்களே. ஆனால் அதைப் பெரும் முயற்சியில்-நாடும் நாட்டத்தில் அவர்கள் வேறுபடுகின்றார்கள். இவ்வாறு இரு கட்சியாரும் வேறு வேறு உலகத்தினராக வாழ்கின்றார்கள். அந்த உலகங்களை இன்றையுலகம் என்றும் நாளையுலகம் என்றும் குறிப்பிடலாம். இன்று : நாளை புளியங் கொட்டையை மண்ணில் ஊன்றி மறைத்து நீர் வார்த்த பிறகு சிறிது நேரம் கழித்ததும் முளைத்திருக்குமா என்ற அறியும் ஆவலோடு சிறுவர்கள் தோண்டிப் பார்ப்பதில்லையா? இந்தச் சிறுவர் |