நோக்கினால், கண்மூடி அழைத்துச் செல்கின்றவர்களுக்குச் செல்வாக்குக் கிடைக்கிறது; பெருங்கூட்டம் அவர்களை நம்பிக் கண்மூடி மந்தையாகத் திரளுகின்றது. எந்தத் கூட்டமும் மூடிய கண்ணைத் திறந்து பார்க்கும் நிலை எய்தும்; தூங்கினவர் விழிப்பது போன்றதுதான் அது. துன்பம் வரும் போது எண்ணாதவரும் எண்ணத் தொடங்குவார்; ஆராயாதவரும் ஆராய முற்படுவார்; உணர்வு அற்றவரும் உணரத் தலைப்படுவார். துன்பம் இவ்வளவு ஆற்றலுடைய விழிப்பு மருந்து. அரசியலில் இன்றையுலக்கதாரைக் கண்ணை மூடிப் பின்பற்றிய மக்களும் இவ்வாறுதான் விழிப்படைகின்றார்கள். வறுமையும் கொடுமையும் குறைவதுபோய் மலிந்துவிட்டால், துன்பம் எல்லாரையும் தாக்குவதாக வளர்ந்துவிட்டால், இந்த மக்கள் அவர்களைக் காரணம் இல்லாமல் ஆதரித்தது போலவே, காரணம் இல்லாமல் வெறுக்கவும் முனைகின்றார்கள். விருப்பு விரைவில் மாறுவதுபோல் வெறுப்பு விரைவில் மாறுவதில்லை. ஆகையால் இந்த வெறுப்பு வீண் போகாமல், செயல்படுகின்றது; நீடித்த வெறுப்பு, மெல்ல மெல்ல நாளையுலகத்தார்க்கு ஆதரவாக மாறுகின்றது. அப்போது அரசியலில் செல்வாக்கு உள்ளவர்கள், பெற்ற செல்வாக்கை இழந்துவிட மனம் இல்லாமல், அடக்கு முறையைக் கையாண்டு அமைதியையும் தம் செல்வாக்கையும் நிலை நிறுத்த முயல்வார்கள். குடியாட்சியாகத் தொடங்கிய முயற்சி மெல்ல மெல்லத் தடியாட்சியாக மாறும் நிலைமை இது. |