உலக வரலாற்றில் எந்தப் பகுதியை நோக்கினாலும் இந்த உண்மை விளங்குகின்றது. அரசியல் காரணங்களால் மக்கள் துன்பம் உற்ற காலங்களில், அவர்களின் துன்பத்திற்கு காரணமாக இருந்தவர்கள் தந்திரத்தைக் கையாண்ட அரசியல் தலைவர்களே. உண்மை வழியை - நிலையான நன்மை தரும் வழியை - நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், இன்று எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று தந்திரத்தைக் கையாண்ட அரசியல் தலைவர்களே, தந்திரம் பலிக்காதபடி பொது மக்கள் விழித்துக் கொண்ட போதுதான் இவர்கள் தடியாட்சியில் இறங்குகின்றார்கள். இன்று வெற்றி கிடைக்காவிட்டாலும் சரி, நிலையான நன்மைக்குப் பாடுபடுவதே நம் கடமை என்று தொண்டு ஆற்றிய தலைவர்களால் உலகம் அல்லல் பட்டதுமில்லை; படுவதுமில்லை. இங்கும் : எங்கும் அரசியல் வாழ்க்கையில் ஒரு பகுதியைக் கண்டோம். இன்றையுலகம் என்றும் நாளையுலகம் என்றும் நோக்கி நன்மையை ஒத்தி வைத்தவர்களையும் வெற்றியை ஒத்தி வைத்தவர்களையும் கண்டோம். காலத்தால் குறுகிய நோக்கமும் காலத்தால் பரந்த நோக்கமும் கொள்வதால் வரும் பாகுபாடுகள் இவை. இனி மற்றொரு பகுதியைக் காணலாம். அதாவது இடத்தால் குறுகிய நோக்கமும் இடத்தால் பரந்த நோக்கமும் கொண்டு அரசியலில் முயற்சி செய்கின்றவர்களைப் பற்றிய பகுதி. |