ஒரு தெருவில் இருபது முப்பது சிறுவர்கள் சேர்ந்து விளையாடுவதாக வைத்துக் கொள்வோம். அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் பொழுதுபோக்காக ஒருவர் உட்கார்ந்திருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அந்தச் சிறுவர்களின் விளையாட்டில் வழக்கம்போல் ஏதாவது சிறு குழப்பம் நேர்கின்றது. அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துள்ள அந்தத் திண்ணையார் சிறுவர்களை நோக்கி "போகட்டும். அந்தக் குழப்பத்தை விட்டு விடுங்கள். முன்போலவே ஒற்றுமையாக விளையாடுங்கள்", என்று சொல்கின்றார். சிறுவர்களோ இந்த அறிவுரையைப் பொருட்படுத்தவில்லை. "இந்த ஆள் சும்மா இருக்காமல் அறிவு சொல்ல வந்து விட்டாரே", என்று எள்ளி நகையாடுகின்றார்கள். திண்ணையார் பொறுமையோடு கொஞ்ச நேரம் இருந்த பிறகு, அவர்களில் நான்கு பேரைத் தனியே அழைத்து, "நீங்கள் செய்ததுதான் சரி அவர்கள் தான் தப்பு செய்தார்கள். அவர்களோடு சேர வேண்டாம். நீங்கள் தனியே பிரிந்து விளையாடுங்கள்", என்று சொல்கின்றார். உடனே அந்தச் சிறுவர்கள் உள்ளம் குளிர்ந்து அவர் சொன்னபடி கேட்டு நடக்கத் தொடங்குகின்றார்கள்; பத்துப் பதினைந்து பேர் தனியே பிரிந்து மற்றவர்கள் மேல் வெறுப்பும் பகையும் பொறாமையும் காட்டி விளையாடுகின்றார்கள். திண்ணையாரைத் தலைவராகப் மதித்துப் போற்றுகின்றார்கள். வழிப்போக்கர் ஒருவர் அங்குச் சிறிது நேரம் நிற்கின்றார். எதிர்க்கட்சியாக உள்ள மற்றப் பிள்ளைகள் அவரை வலிய அழைக்கின்றார்கள். அவரும் போகின்றார்; |