செயலளவில் தந்நலம் வளர்த்துக் கொள்கின்றார்கள். மக்கள் இனம், வகுப்பு, நிறம், மதம், நாடு என்ற காரணங்களை வைத்துப் பிரிவுபட்டு வாழ்கின்றார்கள். அவ்வாறு வாழும்போது பரந்த நோக்கம் உடையவர்களுக்கும் இடம் இருப்பதில்லை. ஆனால், இனம், வகுப்பு, நிறம், மதம், நாடு இவற்றின் பெயரால் விதைத்த பகைவித்துக்கள் வீண்போவதில்லை. அவைகள் கொலையாய், கொள்ளையாய், குழப்பமாய், போராய் மூளுகின்றன. அப்பொழுது கொலை கொள்ளை குழப்பம் போர் முதலியவற்றிற்கு இரையாகி அல்லல்படும் மக்கள், மனம் மாறி ஒற்றுமையையும் அன்பையும் வற்புறுத்தும் அரசியல் தலைவர்கள் சொல்லும் வழிகளைக் கேட்டு நடக்கின்றார்கள்; கேட்டு நடக்க முயல்கின்றார்கள். இந்த நிலைமையில் பகையைப் பெருக்கிவந்த பழைய தந்திரக்காரர்கள் அரசியலில் புகாமல் இருந்தால், உலகத்தில் அமைதி வளரும். ஆனால் அவர்கள் வாளா இருக்க முடியுமா? அப்போதுதான் வாய்ப்புக் கிடைத்தது என்று உணர்ந்து விழிப்போடு எழுகிறார்கள். உண்மையை மறைத்து மக்களின் மனப்பான்மைக்கு ஏற்றபடி பேசி நடிக்கின்றார்கள். "ஆம். ஆம் நாம் எல்லோரும் ஒரே கடவுளின் மக்கள். நமக்குள் எந்த வேற்றுமையும் புகக்கூடாது. வேற்றுமைகளை வைத்துக்கொண்டு நாம் பட்டது போதும். இனியாவது எல்லோரும் ஒன்று என்பதை மறக்காமல் வாழ்க்கை நடத்த வேண்டும்; இதுவரையில் நமக்குள் இருந்த பகையை மறந்துவிட வேண்டும். இது நோன்பாகக் கொள்ள வேண்டும்." என்றெல்லாம் பேசுகின்றார்கள். பொதுமக்கள் இந்தப் பேச்சை எல்லாம் கேட்டு வியப்பு அடைகின்றார்கள். "நேற்று வரையில் நம்மை எல்லாம் பிரிந்திருக்கச் செய்து பகையை வளர்த்த இவர்களே இப்படிப் பேசுகின்றார்களே! எவ்வளவு மனமாற்றம்!" என்று |