ஏமாந்த மக்களாய் எண்ணி மயங்குகின்றார்கள். பரந்த நோக்கத்தோடு வகுப்பு, இனம், நிறம், மதம், நாடு என்னும் பற்றுக்களை எல்லாம் கடந்து வாழ வேண்டும் என்று நெடுங்காலமாக உண்மையாகவே வழிகாட்டி வந்தவர்களையும் மக்கள் மறந்து விடுகின்றார்கள். நேற்று வரையில் பகையையும் பிரிவையும் வளர்த்துவந்து, இன்று உண்மை உணர்ந்தது போல் நடிக்கும் தந்திரக்காரர்களின் வலையில் மயங்கி விழுந்து மறுபடியும் அவர்களுக்கே செல்வாக்கைக் கொடுத்து அரசியலை ஒப்படைக்கின்றார்கள். அரசியலில் பொறுப்புக் கிடைத்ததும் தந்திரக்காரர்கள் பழைய அழிவு வேலையையே புதிய போர்வையில் செய்ய முனைகின்றார்கள். முன்னே சொன்னதும் செய்ததும் ஒன்றாக இருந்தன. இப்போது சொல்வதெல்லாம் பெரிய பெரிய உண்மைகள்; செய்வதெல்லாம் சிறு சிறு தன்னலச் செயல்கள்; பேசுவதெல்லாம் உயர்ந்த கொள்கைகள்; அமைப்பதெல்லாம் தாமும் தம் குடும்பங்களும் மட்டும் வாழ்வதற்கு வேண்டிய வழிவகைகள். பரந்த நோக்கம் பேச்சளவில்; குறுகிய நோக்கமே செயலளவில்; அதனால் பொதுமக்கள் மீண்டும் ஏமாற்றம் அடைகின்றார்கள். இந்த நிலை வந்த பிறகு மற்றவர்கள் உற்றுப் பார்த்து உணர்கின்றார்கள். பரந்த நோக்கம் என்ற பேச்சையே வெறுக்கின்றார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தொடரும் கசப்பாகின்றது. வகுப்பு, இனம், நிறம், மதம், நாடு என்ற பிரிவினைகளே இயற்கை என்றும், இந்தப் பிரிவுகளையும் பகையுணர்ச்சிகளையும் வளர்ப்பதே கடமை என்றும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள். ஒற்றுமை, பரந்த நோக்கம் என்ற பேச்சுக்களை நம்பிக் கெட்டோமே என்ற ஏமாற்ற உணர்ச்சியால், மக்கள் பிரிவினைகளை வளர்ப்பதே. |