அறம் என்று உணர்ந்து எழுச்சி பெறுகின்றார்கள். ஆகவே குறுகிய நோக்கமும் பகை பிரிவுகளும் மறுபடியும் வளர்கின்றன; முன் மண்சுவர்களால் பிரிவினைகள்; இப்போது இரும்புச் சுவர்களால் பிரிவினைகள். இவ்வளவுக்கும் காரணம் தந்திரக்காரர்களின் தன்னலச் செயலே ஆகும். உடனே பெறும் பயன் குறுகிய நோக்கம் உடையவர்கள் செய்யும் முயற்சியால் உடனே பயன் விளையும். களாக்கனி உடனே கிடைக்கும்; பலாப்பழம் கிடைக்க வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். நாளை வரும் பலாப்பழத்தைவிட இன்று பெறும் களாக்கனியே மேல் என்பதுதான் பொதுமக்களின் எண்ணம். ஆகையால் குடும்பமும் இனமும் நாடும் குறுகிய நோக்கத்தாரின் முயற்சியைப் போற்றும்; துணை நிற்கும்; அவர்களுக்குப் பெருமையும் கொடுக்கும்; தலைமையும் நல்கும். இந்தப் பெருமையும் தலைமையும் ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் தன் நோக்கத்தின் குறையை உணராமல் இறுமாந்திருப்பான். ஆனால் உண்மை என்ன? அது களாக்கனிதான்; சிறு பயன்தான்; இன்று இன்பம் போல் காட்டி நாளை வரும் குழப்பம்தான். நன்மை என்பது ஏமாற்றமே ஆகித் தீமை என்பதே மெய்ப்பயன் ஆகும். இதற்குச் சான்றுகள் எங்கெங்கோ தேட வேண்டியதில்லை. மண்ணாசை கொண்டு மற்ற நாடுகளை வென்று அடக்கப் பெரும்போர்களை நடத்திய அரசியல் தலைவர்கள் முதலில் கொண்ட ஊக்கமும் பிறகு உற்ற அழிவும் சான்று கூறுகின்றன; அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் |