பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 25

உலகம் இவர்களைப் பழிக்கின்றது. துன்புறுத்துகின்றது; சட்டம் இயற்றித்
தண்டனை விதிக்கின்றது.

     திருடரையும் பொய்யரையும் கொலைஞரையும் ஒறுத்துத் துன்புறுத்தும்
இதே உலகம் பெருங்கொள்ளையும் பெரும்புளுகும் பெருங்கொலையும்
மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ கொண்டு நடத்தும் இனத்
தலைவர்களையும் நாட்டுத் தலைவர்களையும் என்ன செய்கின்றது?
முன்னவரைத் தண்டிக்கும் உலகம் பின்னவரைப் போற்றுகின்றது. ஒரு
வகையார்க்குப் பழி; அதே செயலைப் பெரிய அளவில் செய்யும் மற்றொரு
வகையார்க்குப் புகழ். ஒரு வகையார்க்குச் சட்டப்படி பெருந்துன்பம்.
அவர்களின் தமையன்மாராகிய மற்றொரு வகையார்க்குப் பெரிய நன்மைகள்.
என்ன தலைகீழ் அமைப்பு!

     காரணம் என்ன? முன்னவர் எளிமையும் பின்னவர் அருமையுமே
காரணம் என்று கூறலாம். விளங்கக் கூறினால், எளிய திருடர், எளிய
பொய்யர், எளிய கொலைஞர் ஆகிய இவர்கள் எளிய முறையில்
உலகத்தாரின் அறிவுக்கு எட்டுமாறு திருடுகின்றார்கள். பொய்க்கின்றார்கள்,
சொல்கின்றார்கள். இனம், நாடு என்னும் காரணங்களால் புகழ் பெற்று
விளங்கும் பெருந்திருடர், பெரும் பொய்யர், பெருங்கொலைஞர் ஆகிய
இவர்களோ உலகத்தாரின் அறிவுக்கு எட்டாத முறையில் திருட்டும் பொய்யும்
கொலையும் மேற்கொள்கின்றார்கள். அந்தச் செயல்களுக்கும் வேறு வேறு
பெயர்களை வைத்து வழங்கி வேறுபடுத்துகின்றார்கள். திருடு என்று
சொல்லாமல் அரசியல் தந்திரம் என்கின்றார்கள்; வெறும் பெயர்கள்
உண்மையை மறைத்து வருகின்றன.