பக்கம் எண் :

26அறமும் அரசியலும்

எத்தனை நாள் இந்த மறைப்பு நீடிக்க முடியும்? உலகம் உணர்ந்து
விழித்தெழும் நாள் வரும். அன்று ஏமாற்றத் தெரியாதவர்கள் உலகத்தின்
கையால் ஒதுக்கப்படுகின்றார்கள் என்பது தெளிவாகும்; ஏமாற்றத்
தெரிந்தவர்கள் உலகத்தின் தலையால் தாங்கப்படுகின்றார்கள் என்பதும்
தெளிவாகும்.

     குற்றம் இன்னது என்று ஆராய்ந்தால், குறுகிய நோக்கம்
உடையவர்களுக்குத் தலைமைப் பொறுப்பைத் தந்த குற்றம் உலகத்தைச்
சாரும். பொது மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு தம்
நிலையை உயர்த்திக்கொண்ட குற்றம் தலைவர்களைச் சாரும்.

     அருள் நெஞ்சத்தால் பண்பட்ட தலைவர்கள் ஒரு போதும் இவ்வாறு
செய்யமாட்டார்கள். மற்ற நாடுகளின் துன்பத்திற்காகவும் குழைந்து உருகித்
தொண்டு செய்ய முற்படுவார்கள். இது பிறந்த மண், இது புகுந்த மண், இது
பிற மண் என்று கருதாமல் பள்ளம் உள்ள இடமெல்லாம் பாய்ந்து ஓடும்
நீர்போல், அவர்களின் நெஞ்சம் குறைகண்ட இடத்தில் எல்லாம் பாய்ந்து
சென்று தொண்டு செய்ய விரும்பும். களவு, பொய், கொலை என்பனவற்றை
ஏமாறவோ, ஏமாற்றவோ, பழம் பெயராலோ புதுப் பெயராலோ செய்து
உடனே வெற்றி பெற வேண்டும் என்னும் குறுகிய நோக்கம் அவர்களிடம்
இல்லை.

     இன்றைய உலகில் உதவி குறைந்துபோய் உறிஞ்சல் மிகுந்து வருகின்றது.
நேர்மை குறைந்து போய்த் தந்திரம் வளர்ந்து வருகின்றது.