வேதனையும் நாடி நரம்புகளில் உள்ள அரிப்பும் எரிப்பும் அவனுடைய மனத்தை அடிக்கடி வருத்திக் கொண்டிருக்கும் அல்லவா? அவன் தன்னை மறந்தாலும் தன் நோயை மறக்க முடியாதே! நூலையும் சோலையையும் மறந்து உடலையும் உடல் உற்ற வேதனையையுமே நினைத்துக் கொண்டிருப்பான் அல்லவா? "மகிழ்ச்சியாக இரு. உடலைப்பற்றி எண்ணாதே", என்ற உபதேசம் அவனுக்கு ஏற்குமா? ஏற்காதது அவன் குறையா? சொன்ன மருத்துவரின் குறையா? அவனுடைய உடலில் உள்ள நோயின் குறையே அல்லவா? இப்படிப்பட்ட நோயாளியைச் சீர்ப்படுத்துவது அருமை; ஆனால் கெடுப்பதோ எளிது. மயக்க மருந்தைக் கையில் எடுத்துக் கொண்டு போய், "ஐயா, வாயைத் திறந்து இதை விழுங்கிவிடு. அரை நாழிகையில் இதனுடைய பயனைப் பார். உன்னுடைய நோயே உனக்குத் தெரியாது. தூக்கம் வரும். தூங்கி எழுந்த பிறகு உடல் நன்றாக இருக்கும், என்று சொல்லி, அந்த மருந்தைக் கொடுத்தால், அந்த நோயாளி முதலில் தயங்கினாலும், ஒருமுறை உட்கொண்டு பயன்கண்ட பிறகு, அவரையும் அவர் மருந்தையும் மறக்கவே மாட்டான். மருத்துவ அறிஞரை விட மயக்கப்பொருள் விற்பவரே வல்லவர் என்று மதிப்பான்; மருத்துவரின் பத்திய முறையைவிட இந்த மயக்கப் பொருளே சிறந்தது என்று நம்பிவிடுவான். அடுத்த முறையில் நாடி நரம்புகளில் நோயின் தொடக்கம் காணும் போதே, அவரை நாடுவான்; அவர் இல்லாவிட்டாலும் அந்த மயக்கப்பொருளை நாடுவான். நாளடைவில், உணவை மறந்தாலும் தொழிலை மறந்தாலும் மறக்க முடியாத அவ்வளவு |