பக்கம் எண் :

30அறமும் அரசியலும்

வேட்கை அந்த மயக்கப் பொருள்மேல் வளர்ந்துவிடும். இப்படித்தான்,
அபினியும் கஞ்சாவும் மக்கள் வாழ்க்கையில் இடம் பெற்றன; கள்ளும்
சாராயமும் இடம் பெற்ற கதையும் உண்மையில் இதுதான். மிக்க
உழைப்பாலோ, களைப்பாலோ, கவலையாலோ நாடி நரம்புகள் சோர்வடையும்
நிலையும் நோய் போன்றதுதான். அந்த நிலையில் பலர் நேரான சீரான
முறைகளைக் கையாளாமல் புலன்களை மயக்கி நோயும் சோர்வும் உணராதபடி
செய்யும் அபினி, கஞ்சா, சாராயம், கள் ஆகியவற்றை நாடி நாடிப் பழகிப்
பழகி நாளடைவில் அவற்றிற்கு அடிமைகளாக மாறிவிடுகின்றார்கள்.

     இத்தகைய குடிகாரர் என்ன செய்கின்றார்கள்? உடல் நலம் கருதி
நல்வழி எடுத்துச் சொல்லும் அறிஞர் சொல்லைக் கேட்காமல், மயக்கப்
பொருள் விற்கும் கடைக்காரரையே நாடுகின்றார்கள். அறிஞர், சொல்லுவது
அரிய வழி என்றும், தம்மால் முடியாதது என்றும் அஞ்சுகின்றார்கள்.
ஆனால் கடைக்காரரிடம் கைகண்ட மருந்து கிடைப்பதாக நம்புகின்றார்கள்;
நாடுகின்றார்கள்.