பக்கம் எண் :

அறம் வாழுமா? 33

காரணத்தையும் காண வேண்டும். அந்தக் கடைகளில் குடிப்பதற்காகப் பலர்
சென்றுவரக் காரணம் என்ன என்று அதன் அடிப்படையைக் காண வேண்டும்.
மக்கள் அறிவுடையவர்களாக விளங்குமாறு கல்வியறிவைப் பரப்புதல் ஒருவழி
என்று தோன்றலாம். ஆனால் கற்றவர்களிடையே கால்பகுதியினர் குடிகாரரே
என்னும் உண்மையை ஆராய்ந்தால், கல்லாதவரிடையே குடிகாரர் தொகை
மிகுதி என்று சொல்லமுடியாது. ஆகையால் கல்வியறிவால் மயக்கப்பொருள்
நாடும் வேட்கை குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. கல்வியறிவால்
அரசியல் அறிவு வளர்ந்தால் பொதுமக்கள் திருந்திவிடுவார்கள் என்றும்
எதிர்பார்க்க முடியாது. அரசியலிலும் கல்லாத பேர்களே நல்லவர்கள்
என்னும் நிலைமை இருந்து வருகின்றது. நூற்றுக்கு நூறுபேர்
கற்றவர்களாக உள்ள நாடுகளிலும் அரசியலில் கயமை இருந்து வருகிறது
அல்லவா?

     நோயும் சோர்வும் குடிகொள்ளாதபடி நலமும் ஊக்கமும் குன்றாதபடி
உடலைக் காக்கும் வாய்ப்பும் ஆற்றலும் மக்களுக்கு உண்டாகுமாறு செய்வதாக
வைத்துக் கொள்வோம். இப்போது பலருக்கு வாய்ப்பு இல்லை; சிலருக்கு
வாய்ப்பு இருந்தும் ஆற்றல் இல்லை. அதாவது, நலம் காக்கும் உணவு
உண்ண வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தும், வறுமைத்
தொல்லையால், அப்படிப்பட்ட நல்ல உணவு கிட்டுவதில்லை. அந்த நல்ல
உணவு சிலருக்குக் கிடைத்தும், அதைப் பயன்படுத்தி உடலைக்காக்கும்
ஆற்றல் சிலருக்கு இல்லை. சோர்வு உண்டாகாமல் வாழ வேண்டும் என்ற
எண்ணம் பலருக்கு இருந்தும், உழைப்பைக் குறைத்துக்கொள்ள முடியவில்லை;