| கலையின்பத்தைப் பெற முடியவில்லை. உழைப்பைக் குறைத்தலும் கலைச்செல்வம் நுகர்தலும் சோர்வு போக்குவதற்குக் கைகண்ட மருந்துகள். அளவோடு உழைத்துவிட்டு இயற்கையின் எழிலில் தோயவல்லவர்க்கு உடல் சோர்வுக்கும் இடம் இல்லை; உள்ளச் சோர்வுக்கும் இடம் இல்லை. உழைப்பை அளவுபடுத்திச் செய்து முடித்தபின் இசைக்கலையில் மூழ்கியிருக்க வல்லவர்களையும் இந்த இருவகைச் சோர்வும் அணுகுவதில்லை. ஓரளவாக உழைத்துக் காவிய உலகத்தில் களிக்கவல்லவர்களுக்கும் சோர்வு என்பது இருப்பதில்லை. மற்றக் கலைகளும் அவ்வாறே பயன்பட வல்லவை. ஆனால், உழைப்பை அளவுபடுத்தி வைத்திருப்பது எங்கே? நாளெல்லாம் உழைத்தும் குடும்பத்திற்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குக் காசு கொண்டுபோக முடியாத ஏழைகளின் வாழ்க்கையில் உழைப்பை அளவு படுத்துவது முடியுமா? மற்றவர்களுடைய வாழ்க்கையில் உழைப்பது ஒரு பங்காக இருந்தாலும், அதை நினைத்து வீட்டுத் திண்ணையிலோ கடை முனையிலோ இருந்து இருந்து கவலைப்பட்டு அடையும் சோர்வு மிகுதியாக இருக்கின்றது. இவ்வாறு பெரும்பாலோர் வாழ்க்கையில் உழைப்பும், உழைக்கும் தொழிலைப் பற்றிய கவலையும் பெருகியிருப்பதால், சோர்வைக் குறைக்க வழி உண்டோ? தவிர, கலையுலகமோ பெரும்பாலும் ஏழைகளுக்கு எட்டாத உலகமாக இருக்கிறது. கலையின்பத்தில் மூழ்க ஓய்வுதான் இல்லை என்றால், வாய்ப்பும் இல்லாமல் வாட நேர்கின்றது. பெரும்பாலோர் நிலை இது. மற்றவர்களுக்கோ உழைப்பே இல்லாத காரணத்தாலும், உழைப்புக் குறைந்த காரணத்தாலும், வாழ்க்கையே செயற்கையாக மாறி விடுகின்றது. அழகும் இழந்து சோர்வு மலிந்த உடலோடு வாழ்கின்றார்கள். பக்கத்தில் |