| வானொலிக் கருவி இசை முழங்கும்; இசைத் தட்டு ஒருபக்கம் காத்திருக்கும். குயிலும் பூவையும் பாடும் சோலை ஒரு பக்கம் அழகை அள்ளி வீசும். நீல வானத்தின் கோலக் காட்சிகள் மாறிமாறிக் கவர்ச்சியூட்ட முயலும். ஆனாலும் இந்த உழைப்பில்லாத மக்களின் நாடி நரம்புகள் உயர்ந்த குடிவகைகளை நாடி ஏங்கிக் கொண்டிருக்கும். உழைப்புக் குறைந்த வாழ்க்கையால், அவர்களின் நாடி நரம்புகள் ஓட்டமும் உயிர்த்தன்மையும் குறைந்து தேங்கிச் சாய்க்கடைகளாய் அழுகிக்கொண்டிருக்கும். ஆகையால் இயற்கையான ஆற்றல் இழந்து செயற்கை உணர்ச்சி ஊட்டும் குடிவகைகளை வரவேற்கும் நிலையிலிருக்கும். இவ்வாறு நோக்கினால், உலக வாழ்க்கையை நன்றாக நடத்துவதற்கு இன்றியமையாத வாய்ப்பு, பலருக்கு இல்லை; வாய்ப்பு இருந்தும் ஆற்றல் இல்லாதவர் சிலர். ஊக்கம் குன்றிச் சோர்வு மிகுந்த பிறகு பழைய நிலையை அடைவது எளிய முயற்சியில் முடியுமா? உண்மையில் அழிவு வேலையைவிட ஆக்க வேலைக்கு முயற்சி மிகுதியாக வேண்டும் அல்லவா? ஆகவே, ஆக்க வேலையை மெல்ல மெல்லச் செய்து பண்படுத்தும் முறையை யார் நம்புவார்கள்? உடனே ஏதாவது ஒரு குறுக்கு வழியால் பயனை அடைய முடியுமா என்று மனம் விரும்புவது இயற்கை. அந்தப் பயன் நீடிக்குமா, தீமை தருமா என்பதை ஆராய்ந்து சீர்தூக்கும் பொறுமை அற்ற நேரம் பார்த்துப் பலருடைய வாழ்க்கையில் மயக்கப் பொருள் இடம் பெறுகின்றது; நாளடைவில் செல்வாக்கும் |