பக்கம் எண் :

36அறமும் அரசியலும்

பெறுகின்றது. பெற்றுவிட்ட செல்வாக்கைத் தகர்க்க முடியாத நிலையை
அடைந்து பழங்குடிகாரர்களாக மாறிவிடுகின்றவர்களை நினைத்தால் இரக்கமே
தோன்றுகிறது. அவர்கள் செவி, அறிஞர் மொழியைக் கேட்குமா? கேட்டாலும்
பயன்தான் உண்டா? மயக்கப் பொருள் விற்கும் கடைக்காரரின் வாணிகத்தைத்
தடுத்துத்தான் பயன் என்ன? பழங் குடிவகை போகலாம்; புதுவகை வரலாம்.
உடனே மயக்கிக் கெடுப்பது நீங்கலாம். மெல்ல அசைத்துக் கெடுப்பது
புகலாம். கள் நீங்கலாம்; காபி வரலாம். சாராயம் போகலாம்; டீ புகலாம்.

     அரசியலிலும் இப்படித்தான் ஒன்று நீங்கி மற்றொன்று வரலாம். ஓர்
அமைப்பு ஒழிந்து மற்றோர் அமைப்பு இடம் பெறலாம். ஆனால் தீமை
முற்றும் அகலுமா? தூய்மை நிரம்புமா?

பண வேட்டை

     உடல் வகையில் உணர்ந்த உண்மையைத்தான் அரசியல் துறையிலும்
உணர வேண்டும். பொதுமக்கள் ஏன் மயக்கப் பொருளை நாடுகின்றார்கள்
என்று அடிப்படைக் காரணத்தைக் காண்பதுபோல், அரசியலில் கொடுமைக்கும்
தந்திரத்திற்கும் ஏமாற்றத்திற்கும் ஏய்ப்புக்கும் ஏன் மக்கள் பலியாகின்றார்கள்
என்று அடிப்படைக் காரணத்தைக் காண வேண்டும். உடல் நலம் காத்து
உழைப்பை அளவு படுத்திக் கலைத்துறையால் ஊக்கம் பெறும் வாழ்க்கை
இருந்தால், மயக்கப் பொருளை நாடும் நாட்டமே மக்களிடம் இருக்காது
அல்லவா? அதுபோலவே, பொருட் கவலை இல்லாமல் அறம் நாடி அமைதி