பக்கம் எண் :

அறம் வாழுமா? 37

போற்றும் வாழ்க்கை இருந்தால், மக்கள் அரசியலிலும் சீர்திருந்துவார்கள்;
தகாதவர்களுக்குத் தலைமையும் பொறுப்பும் கொடுத்துப் பலியாக
மாட்டார்கள்; யாரோ சிலர் தன்னலத்தால் விளைக்கும் பூசல்களுக்கும்
போர்களுக்கும் காரணமில்லாமல் தலை கொடுத்து அல்லல்பட மாட்டார்கள்.
ஆகவே, மக்களின் உடல் நலத்தையும் ஊக்கத்தையும் காப்பது போலவே,
அவர்களின் பொருள் நிலையையும் அமைதியையும் போற்ற வேண்டும்;
அதாவது, வறுமையையும் கவலையையும் அகற்றும் நல்ல அரசியலை
அமைக்க வேண்டும். வறுமையால் வாடிக்கொண்டு கவலைப்படுகின்ற கொடிய
நிலை ஒழிந்து, எல்லாருக்கும் தொழில் உண்டு. தொழில் செய்தால் பொருள்
உண்டு. வாழ்க்கை உண்டு என்ற நல்ல நிலை இருந்தால் மயக்குவோரின்
வலைகளில் சிக்குண்டு தம்மைத் தாமே கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்போது அந்த அரசியலில் பணவேட்டை இருக்காது; அறநாட்டமே
இருக்கும். அது நோயுற்ற அரசியலாக இருக்காது; மயக்க வெறி தேடி
அலையும் நிலை மக்களுக்கு இருக்காது. பரந்த நோக்கமுடையவர்கள்
செய்யும் தொண்டு அவர்களால் வரவேற்கப்படும். அரசியல் உலகத்தில்
நெருஞ்சியும் கள்ளியும் விளையாமல் நெல்லும் கரும்பும் விளையும்.
போருக்கும் பூசலுக்கும் வித்து இடுவோரின் முயற்சி பலிக்காமல்,
ஆக்கத்திற்கும் அமைதிக்கும் தொண்டு செய்வோரின் முயற்சி பயன்தரும்.