பக்கம் எண் :

40அறமும் அரசியலும்

ஆடுகின்றவர்களையே பொது மக்களும் நம்புகின்றார்கள்; ஆடு, ஊன்
கடைக்காரனைத்தான் நம்புகின்றது. அறம் வேறு, அரசியல் வேறு", என்று
விட்டுத் துறந்து ஒதுங்குகின்றார்கள். இவர்கள் ஒரு பக்கம் இருக்க, அறத்தை
நம்பாமல், மதிக்காமல், பொருளே சிறந்தது, பணந்தான் உலகம் என்று
உணர்ந்து வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றவர்களுக்குக் குடும்பம் துணை
செய்கின்றது; ஊர் உதவுகின்றது; அரசியலும் போற்றுதல் செய்கின்றது.
இவர்களும் வீழ்ச்சி அடையலாம்; அது வேறு. வீழ்ச்சி எல்லோருக்கும் பொது;
புதுமை அல்ல. ஆனால் ஓரளவு செல்வாக்கும் புகழும் பெற இவர்களால்தான்
முடிகின்றது. அவ்வளவு உயர்வும் நலமும் அறநாட்டம் உடையவர்களுக்கு
இல்லை. இந்த உண்மையை மறைத்துப் பயன் இல்லை; உள்ளவாறே கண்டு
உண்மை என்று உணர்ந்தால், நம் கடமை இன்னது என்பது தெளிவாகும்.

     அறநாட்டம் உடைய சான்றோர்கள் செய்த முயற்சிகள் இன்று வரையில்
போதிய பயன் அளிக்கவில்லை என்பது வெளிப்படை. இந்த நன்முயற்சிகள்
செய்த அந்தந்தக் காலத்திலேயே அவர்கள் அறநாட்டத்தை வற்புறுத்தி
வந்திருக்கின்றார்கள்; அறநாட்டத்தை மாய்க்கும் பகையான பணவேட்டையைச்
கடிந்து வந்திருக்கின்றார்கள். இந்தப் பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே
ஒழிக்க வேண்டும். அதற்கு உரிய நெறியில் அரசியலை அமைக்க வேண்டும்
என்னும் கருத்து உலகத்திற்கே புதியது. இந்த நூற்றாண்டில் அரசியல்
அறிஞர்கள் தெளிந்து கண்ட உண்மை அது. "வண்மை இல்லை ஓர் வறுமை
இன்மையால்", "கொள்வார் இலாமையின் கொடுப்பாரும் இல்லை" என்னும்
பொன்மொழிகளும் புலவரின் உயர்ந்த கற்பனையே அல்லாமல்