வறுமையிலே விட்டு ஒதுங்கினால், தாழ்வுற்று வருந்தும் வகுப்பார் முன்னேற்றம் பெற்றவர்களோடு பகை வளர்க்க இடம் ஏற்படுகின்றது. வகுப்பின் பெயரால் பணம் போர் தொடங்கியுள்ள நிலை இது. மதத்தின் பெயரால் மக்கள் பிளவுபட்டு நிற்பதும் இப்படிப்பட்டதே. ஒவ்வொரு மதத்தாரிலும் ஏழைகளும் உண்டு; செல்வரும் உண்டு. ஏழைகள் தாம் படும் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மற்ற மதத்தார் செய்யும் கொடுமைகளே என்று ஆத்திரம் கொள்ளுகின்றார்கள். செல்வர்களோ தமக்கு வரும் இடையூறுகளுக்கு எல்லாம் மற்ற மதத்தாரின் பொறாமையும் பகையுமே காரணம் என்று புழுங்குகின்றார்கள். இந்த ஆத்திரமும் புழுக்கமும் தீமை விளைக்காமல் அடங்குவதில்லை; மதத்தின் பெயரால் கொலையும் கொள்ளையும் கொடுமை பலவுமாய் வெளியாகின்றன. உண்மைக் காரணம் மதம் அல்ல; பண வேட்டையே அடிப்படையில் இருந்து இந்தக் கொடிய கொள்ளையும் கொலையும் செய்கின்றது. இதுதான் மதத்தின் பெயரால் பணம் அமைக்கும் போர்க்களம். உலகப்போர் என்ன பெயர் கொண்டு தொடங்குகின்றது? நாட்டுப்பற்று (தேசாபிமானம்) என்னும் பெயரால் தொடங்குகின்றது. ஆனால் உண்மையை ஆராய்ந்தால், ஒரு நாடு மற்றொரு நாட்டைப்போல், அல்லது அதைவிட மிகுதியாகப் பணத்தைப் பெருக்க வேண்டும் என்று செய்கின்ற முயற்சியே இந்தப் பெரும் போர்களுக்குக் கால்கோள் விழாவாக அமைகின்றது. மற்ற நாட்டைப் போல் பணப் |