பெருக்கம் வேண்டுமானால், கைத்தொழிற் பொருள்களை விற்கச் சந்தைகள் வேண்டும்; அடங்கி உதவ வறிய நாடுகள் வேண்டும், மூலப்பொருள்களை அனுப்ப வேறுநாடுகள் வேண்டும். இவ்வாறு சந்தைகளும் நாடுகளும் வசப்பட வேண்டுமானால் படை வல்லமை வேண்டும், படை வல்லமையால் எழுந்து தலையெடுக்கும் மற்ற நாடுகளை அடக்கி ஒடுக்க வேண்டும், இடையூறுகள் செய்யும் மற்ற நாடுகளை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்று இவ்வாறே படிப்படியே பணவேட்டை உலகப்போராக மூண்டு, மக்கள் தொகையில் பெரும் பங்கை அழித்துவிடுகின்றது. நாட்டுப்பற்று என்ற பெயரால் பணவேட்டை போர்த் தொல்லையை விளைக்கும் கதை இது. பணக்கவலை இன்று எவரையும் விட்டபாடில்லை. யாரோ சில ஏழைகளைத்தான் பணக்கவலை வாட்டுகின்றது என்று எண்ணிவிடக் கூடாது. கூலிவேலைக்காரர்க்கு அந்தந்த வேளைக்கு வேண்டிய வயிற்று உணவு பற்றிய கவலை இருக்கின்றது. தொழிற்சாலைகளில் உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு அந்த வாரத்து உணவுக்கு வேண்டிய பணத்தைப் பற்றிய கவலை இருக்கின்றது. கற்றுப்பட்டம் பெற்றுக் 'குமஸ்தா' முதலான வேலைகளில் உள்ள எழுத்துத் தொழிலாளர்க்கும் அந்தந்த மாதத்துச் செலவுக்கு வேண்டிய பணக்கவலை இருக்கின்றது. சிறு கடைகளில் வியாபாரம் செய்கின்றவர்களுக்கும் அந்தந்தக் காலத்துச் செலவுக்கு வேண்டிய பணக்கவலை உள்ளது. பெரிய கடைகளை உடைய வியாபாரிகளுக்கு அந்தந்த ஆண்டுக்கு உரிய வருவாய் பற்றிய பணக்கவலை உள்ளது. நிதிநிலையம், பங்குநிலையம் முதலியன வைத்து நடத்தும் பெரிய வியாபாரிகளுக்கும் |