மற்றவர்களைப்போல் பெருஞ்செல்வராக வாழவேண்டுமே என்ற பொல்லாத பணக்கவலை உள்ளது. பல ஆண்டுகள் கழிந்த பிறகு தம் முதுமையில் தேவையான பொருள் வேண்டும் என்ற பணக்கவலை, தம் வயிற்றில் பிறக்கும் மக்களுக்கும் அவர்களுடைய மக்களுக்குமாகப் பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்ற பணக்கவலை என்று எப்படியெல்லாம் பணக்கவலை வேறு வேறு வடிவம்கொண்டு வளர்ந்து வருகின்றது. வயிறு நிறைகின்ற வரைக்கும் வயிற்றைப் பற்றிய கவலை, வயிறு நிறைந்த பின் வீடு வாசல் நகை பற்றிய கவலை, அவைகளும் நிறைந்த பின் பெட்டி பேழை நிதிநிலையம் முதலியன நிரம்புதல் பற்றிய கவலை: இவ்வாறு வெவ்வேறு வளர்ச்சி இருந்து வருகின்றது. மூட்டை தூக்கிக் கூலிவேலை செய்வது முதல் மின் விசிறியின் கீழே அமர்ந்து கையெழுத்து இடுவது வரையில் எல்லா முயற்சிகளும் பணக்கவலை பற்றிய முயற்சிகளே. கப்பலில் கடல் கடந்து சென்று முயலும் முயற்சி, கடல் புகுந்து நீரில் மூழ்கிச் செய்யும் முயற்சி, வானக்கப்பலில் ஏறிச் சென்று செய்யும் முயற்சி, நிலம் கடந்து நெடுந்தொலைவு சென்று செய்யும் முயற்சி, நிலம் குடைந்து ஆழத்தில் சென்று அஞ்சுதலோடு செய்யும் முயற்சி, மின் வலியாலும் மற்ற விஞ்ஞானக் கருவிகளாலும் வியக்கத் தக்க முறையில் செய்யும் பல்வேறு முயற்சிகள் எல்லாம் பணவேட்டை காரணமாக ஏற்பட்டவைகளே. |