அறம் அழியாது ஆயினும், இவ்வளவு முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகின்றன. மக்கள் பலரும் பண வேட்டைக்கு அடிமையாகி அலைகின்றார்களே அல்லாமல் பணத்தைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்று அமைதியாக வாழ முடியவில்லை. பணம் கருவி, வாழ்வே குறிக்கோள். ஆனால், இன்று என்ன ஆயிற்று? வாழ்வுக்கு வழி இல்லை; பணத்திற்கே அலைந்து அலைந்து அழிவதாக இருக்கின்றது. வாழ்வு ஒரு வீடு; பணம் சமையலுக்கு உதவும் என்று சேர்த்த நெருப்பு. வீட்டில் வாழக் கொண்டு வந்த நெருப்புப் பற்றி எரியத் தொடங்கி வீட்டையே அழிக்கின்றது. வீடும் போகின்றது; சமையலுக்கும் இடமில்லை; நெருப்பு மட்டும் கொழுந்துவிட்டு ஓங்கி எரிகின்றது. எரியட்டும்; எல்லாம் போகட்டும்; மனிதன் இருக்கின்றான்; பல்லாயிர ஆண்டுகளாக வளர்ந்துபெற்ற மக்கட் பண்பையும் உயிராற்றலையும் எந்தத் தீயும் அழிக்க முடியாது; இவற்றைக் கொண்டு வேறு வீடு கட்ட முடியும்; இந்த வீடு பற்றி எரிந்த பிறகு, இதனால் கற்ற உண்மையை மறக்காமல், அந்த புதிய வீட்டில் நெருப்புக்குத் தனி இடமும் தனி அடுப்பும் வைத்துப் பற்றி எரியாதபடி காத்துக்கொள்வான்; எதற்குக் கொண்டு வந்த நெருப்பு என்பதை மறக்காமல் அதற்குப் பயன்படுத்துவான். வயிற்றில் பசி கிள்ளும்போது சமையலை மறக்க முடியுமா? புதிய வீட்டில் புதிய முறையில் நெருப்பை வேலியிட்டுக் காத்துச் சமையல் செய்து பசியைத் தணிக்கக் கற்றுக்கொள்வான். |