பக்கம் எண் :

63

     மனிதன் மனத்தில் உணர்வு உள்ள வரையில் அறத்தை அழிக்க
முடியாது. இன்னொருவன் படும் துன்பத்தைக் கண்டால் நெகிழும் மனப்பண்பு
உள்ள வரையில் அறம் இருந்தே தீரும். பசி உள்ள வரையில் சமையலை
மறக்க முடியாததுபோல், மனப்பண்பு உள்ள வரையில் அறத்தை மறக்க
முடியாது. அறத்தைக் காக்கத் துணை செய்யும் என்று போற்றிய அந்த
நெருப்பு - பணம் - இன்று வாழ்வையே பற்றி எரித்துக் கொழுந்துவிட்டு
ஓங்குகின்றது; அறநாட்டத்திற்கே இடமில்லாமல் செய்துவிடுகின்றது.
போகட்டும்; பழைய சமுதாய அமைப்பு மறைந்து சாம்பலானால், புதிய
சமுதாய அமைப்பு ஒன்றைக் காண மக்களால் முடியும்! அந்த அமைப்பில்
பணம் இருக்கும்; பணவேட்டைக்கு இடம் இருக்காது. அறம் வாழும்;
அறநாட்டம் அடிப்படையில் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்க்கை
திருந்தும். அன்று தான் விமானங்களில் வானில் பறக்கக் கற்ற மக்கள்,
கப்பல்களாலும் நீர்மூழ்கிகளாலும் கடலில் நீந்தவும் மூழ்கவும் கற்ற மக்கள்,
நிலத்திலும் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என்பதை
மெய்ப்படுத்துவார்கள்; பணம் ஒரு கருவி, அறம் நெறி, வாழ்வே குறிக்கோள்
என்பதை மெய்ப்படுத்துவார்கள்.