தவறான ஏக்கம் வாழ்க்கையில் உள்ள குறையை உணரவல்லவர்கள் பெருகினால் குறை ஒழியும் நாள் விரைவில் வரும். ஆனால், குறையை இவ்வாறு உணராமல் பணவேட்டைக்கு இரையாகின்றவர்களின் தொகையே மிகுதியாக இருக்கின்றது. வயிற்று உணவுக்கே வழி இல்லாதவர்கள் வீடும் வாசலுமாக வாழ்கின்றவர்களைப் பார்த்து ஏங்குகின்றார்கள்; அவர்களைப் போல் ஓரளவு பொருள் கிடைத்துவிட்டால் கவலை எல்லாம் தீர்ந்து போகும் என்று எண்ணி மயங்குகின்றார்கள். வீடும் வாசலுமாக வாழ்கின்றவர்களோ நகையும் பகட்டுமாக வாழ்கின்றவர்களைப் பார்த்து ஏங்குகின்றார்கள்; அவர்களைப் போல் பொன்னும் பொருளும் பெற்றுவிட்டால் கவலையற்ற வாழ்வு கிட்டிவிடும் என்று எண்ணி கலங்குகின்றார்கள்; நகையும் பகட்டுமாக வாழ்கின்றவர்களோ பங்கும் பாங்கியுமாக வாழ்கின்றவர்களைப் பார்த்து ஏங்குகின்றார்கள்; அவர்களைப்போல் பெரிய வாணிகப் பங்கும் நிதிநிலையப் பொறுப்பும் பெற்றுவிட்டால் எல்லாக் கவலையும் அகன்றுவிடும் என்று ஆசைப்படுகிறார்கள். வாணிகத்திலும் பிறவற்றிலும் பொருள் குவித்தவர்களோ, மற்றவர்கள் கொள்ளும் பொறாமையையும் செய்யும் பொல்லாங்குகளையும் கண்டு ஏங்குகின்றார்கள்; அரசியல் பதவியும் ஆட்சியுரிமையும் நிலையாகப் பெற்றுவிட்டால் மற்றவர்களைத் தலையெடுக்காதபடி மயக்கி அடக்கிவிட்டால், கவலை தீர்ந்த வாழ்வு |