வாழ முடியும் என்று நம்பி அரசியலைக் கைப்பற்ற அலைகின்றார்கள். இந்த ஆசைகளுக்கு ஓர் அளவே இல்லை; அலைவுகளுக்கு ஓர் எல்லையே இல்லை. ஒரு வகையாரைப் பார்த்து மற்றொரு வகையார் பொறாமைப்பட்டுப் பணவேட்டையிலும் முடிவில் பணவேட்டைக்கு அரண் செய்வதற்காக அரசியல் வேட்டையிலும் உழல்கின்றார்கள். இன்று ஒருவருடைய இன்ப துன்ப உணர்வுகளை அளந்தறிய முடியவில்லை. உள்ளத்தில் கவலையும் துன்பமும் பெருகியிருந்தாலும் வெளியே பகட்டாக வாழ்கின்ற வாழ்க்கையைக் கண்டு, அவர்கள் இன்பமாக வாழ்வதாக மற்றவர்கள் எண்ணுகின்றார்கள்; அவர்களைப் போல் பணம் சேர்த்துப் பகட்டாக வாழ்ந்தால் இன்பம் கிடைக்கும் என்று மயங்குகின்றார்கள். இந்த மயக்கத்தைப் போக்குவது எப்படி? அவர்கள் வாழும் வாழ்க்கையை ஆராய்ந்து காட்ட வேண்டும். அவர்கள் உள்ளத்திலும் பணக்கவலையும் அதன் காரணமாக மற்றக் கவலையும் இருப்பதை உணர்த்த வேண்டும். அதை எப்படிச் செய்வது? ஒருவன் இன்புறுகின்றானா, அல்லது துன்புறுகின்றானா என்பதைக் கண்ணும் செவியும் காட்ட முடியுமா? புறத்தில் அழுக்கற்ற ஆடை ஒளி வீசலாம்; ஆனால் அகத்தில் அழுக்காறு நெளியலாம். புறத்தில் செல்வக் கோலம் திகழலாம்; அகத்தில் 'இல்லையே, போதவில்லையே' என்று வறுமை வாட்டலாம். புறத்தில் பெருமை விளங்கலாம், அகத்தில் சிறுமை இருக்கலாம். புறத்தில் வீரம் தோற்றலாம்; அகத்தில் கோழைத் தன்மையும் அச்சமும் இருக்கலாம். இவைபோலவே, புறத்தில் இன்பம் விளங்கலாம்; அகத்தில் துன்பம் வதைக்கலாம். |