உடம்பினுள் எந்த எலும்பு எவ்வாறு இருக்கின்றது என்பதையும் எந்தக் கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதையும் ஊடுருவிக் கண்டு அறிவதற்கு எக்ஸ்ரே என்னும் சிறந்த கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது. உடம்பு அப்படியே இருக்கும்போதே அதன் உள் அமைப்புகளைக் காண அந்தக் கருவி பெருந்துணை செய்கின்றது. இவ்வாறே, புறத்தோற்றம் அப்படியே இருக்கும்போதே, அதை ஊடுருவிச் சென்று அகத்தில் உள்ள இன்ப துன்ப உணர்வுகளை அறிவிக்க வல்ல ஒரு புதிய கருவி அமைந்தால் உலகம் எவ்வளவோ சீர்ப்பட்டு விடும். இன்ப துன்பம் உள்ளத்தில் உணரும் உணர்வுகளே என்று உலகம் உணர்ந்து கொண்டால், செல்வருடைய புறத்தோற்றத்தைக் கண்டு மற்றவர்களும் பணவேட்டைக்குப் புறப்படமாட்டார்கள். ஏழைகளின் புறத்தோற்றத்தைக் கண்டு ஒதுக்கவும் மாட்டார்கள். அற நெறியைக் கடைப் பிடித்து வாழ்கின்றவர்கள் உள்ளத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் விளங்குவதைத் தெளிந்து கொள்வார்கள். அற நாட்டம் இல்லாமல் அலைந்து அலைந்து பணம் குவிப்பவர்களின் உள்ளத்தில் கவலையும் குழப்பமும் துன்பமும் விளங்குவதையும் தெளிவாக உணர்வார்கள். உயர்ந்த புலவர்கள் தம் கலைத்திறமையால் இதை ஓரளவு விளக்கியுள்ளார்கள். செல்வாக்கும் செல்வமும் நிரம்பியவர்கள் உள்ளம் உடைந்து வருந்தி அழியும் காட்சியை அவர்களின் கலை காட்டுகின்றது. வறுமைக்கும் இடையே இடையூறுகளுக்கு நடுவே வாழ்ந்தவர்கள் |