செம்மையும் பெருமிதமும் குன்றாத உள்ளமும் விழுமிய நோக்கமும் உடையவர்களாய் வாழ்ந்த காட்சியையும் அவர்களுடைய கலை தெளிவாக்குகின்றன. கலையின் வாயிலாகவோ, புதிய ஒரு கருவியின் வாயிலாகவோ, உண்மையாக இன்புறுகின்றவர்கள் யார் என்றும், உண்மையாகத் துன்புறுகின்றவர்கள் யார் என்றும் உலகம் உணர்ந்து கொண்டால் இந்தப் பணவேட்டையை மங்கச் செய்யலாம்; அற நாட்டம் உடையவர்கள் இடர்ப்பட்டாலும் இன்னலுற்றாலும் அமைதியாக வாழ்ந்து சிறப்புறுகின்றார்கள் என்பதை உலகம் உணர்ந்து கொண்டால், அறத்தின் பெருமையும் எளிதில் விளங்கி விடும். அகத்தில் இன்ப துன்ப உணர்வுகளை ஆராய்ந்து உண்மையான இன்ப வாழ்விற்குக் காரணம் கண்டு அற நாட்டம் கொள்ளாமல் போனாலும் போகட்டும். புறத்தில் நிகழும் நன்மை தீமைகளையாவது நன்றாக ஆராய்ந்தாலும் போதும்; இந்த ஆராய்ச்சியின் பயனாக அற நாட்டம் அமையும். நன்றாக ஆராயாதபடி உள்ள நோயும் சோர்வும் உடனே பயன் தருகின்ற மயக்கப் பொருளை நாடத் தூண்டுகின்றனவே அல்லாமல், நின்று பயன் தருகின்ற பத்திய முறையையும் கலைத் துறையையும் நாடுமாறு செய்யவில்லை. வாழ்க்கை முறையிலும் அரசியலிலும் குடிகாரராக மாறிவிட்ட பலரும் குறுகிய நோக்கம் ஒழிந்து நன்மை தீமைகளை ஆராய்வது எப்படி? |