பக்கம் எண் :

6அறமும் அரசியலும்

உழைக்காமல் உள்ளதைத்தின்று நாளைக் கழிக்கச் சிலருக்கு எண்ணம் வந்தது.
சிலர் அளவுக்கு மீறி உழைத்து அங்கும் இங்கும் அலைந்து கிடைத்ததை
எல்லாம் கொண்டு வந்து வீடுகளில் சேர்த்து வைத்தார்கள். இதனால் சில
வீடுகளில் உணவுப் பொருள் சேமிப்புக் குறைவுபட்டது; சில வீடுகளில்
மிகுதியாயிற்று. இந்த வேறுபாட்டை மறைக்க முடியுமா? உழைப்பைக்
குறைத்துக் கொண்டு அறிவை வளர்த்தவர்கள் அமைதியாக இருப்பார்களா?
சேர்த்து வைத்தவர்களிடம் இன்சொல் கூறித் தந்திரமாகச் சிலர் பறித்து
உண்ணத் தலைப்பட்டார்கள். சிலர் அவர்கள் வெளியே போயிருக்கும் நேரம்
அல்லது ஏமாந்திருக்கும் நேரம் பார்த்து வீடுகளின் உள்ளே மறைந்து புகுந்து
சேர்த்துள்ள உணவை எடுத்து வரத் தொடங்கினார்கள். முன்னே பக்கத்துத்
தெருவினர் செய்தது கொள்ளை. இது திருடு. கொள்ளையைத் தடுக்கக்
காவலாளரும் (படை) தடி முதலியனவும் (போர்க்கருவிகள்) வைத்தும்
பயன்படுத்தியது போல், திருட்டைத் தடுக்கவும் வழி கண்டார்கள். கதவு
பூட்டும் அப்போது தான் மனித மூளையால் கண்டு பிடிக்கப்பட்டன. கதவைத்
திறக்கும் நிலையையும் பூட்டை உடைக்கும் நிலைமையும் வந்த போது,
ஊருக்குப் பொதுவான காவல் போதாது என்று, தெருக்காவலும் போதாது
என்று, வீட்டுக்கு வீடு காவல் (போலீஸ் முதலியன) ஏற்படுத்தும் நிலைமை
வந்தது. ஒருவரை ஒருவர் கண்டால் அன்பாகப் பழகி உறவோடு பார்க்கும்
நிலைமை மாறியது. அறிவோடு பழகி ஐயத்தோடு நோக்கும் நிலைமை வந்தது.
உண்பதும் உறங்குவதுமாக முடிந்திருந்த இயற்கை வாழ்க்கை மாறியது.
உணவுப் பொருளைத் தேடும் முயற்சியைவிட, அதற்காகச் செலவிடும்
காலத்தைவிட, தேடிய பொருளைக் காக்கும் முயற்சி மிகுதியாயிற்று.
காப்பதிலேயே மிகுதியான நேரமும்