பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 7

செலவாயிற்று. வெயிலுக்கும் மழைக்கும் பனிக்கும் விலங்குக்கும் தடையாக
எழுந்த வீடுகள், ஒருவரை ஒருவர் பிரித்துவைத்து ஐயமும் பகையும் கொண்டு
வாழ்வதற்கு உரிய எல்லை அமைப்புகள் ஆயின. கண்ட இடமெல்லாம்
வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடை முதலியனவும் இருந்த வீடுகளில்,
கண்ட இடமெல்லாம் கதவும் பூட்டும் ஈட்டியும் வாளும் அளவில்லாமல்
காணப்படும் நிலைமை வந்தது. தொடக்கம் ஒன்றாக இருந்தது; முடிவு
ஒன்றாக ஆயிற்று.

வந்தனை - நிந்தனை

     உழைப்பு இல்லாதவனை ஒதுக்கி வைக்கத் தெரிந்திருந்தால்,
சேர்த்துவைக்கும் உணவுப் பொருளை ஊர்க்குப் பொதுவாகச் சேர்த்துவைக்கத்
தெரிந்திருந்தால், அந்த அந்தத் தெருவில் உள்ளவர்கள் பகையில்லாமல்
சேர்ந்து வாழ்ந்து ஒற்றுமைப்பட்டிருக்க முடியும். இப்படி ஒவ்வொரு
தெருவிலும் உழைப்பு இல்லாத மக்களைத் தேடிக் கண்டு திருத்தியிருந்தால்,
ஒவ்வொரு தெருவின் மக்களும் உழைப்பாளிகளாக மாறியிருந்தால், எந்தத்
தெருவிலும் கொள்ளைக் கூட்டம் என்று சிலர் ஒன்று சேர்ந்திருக்கமாட்டார்கள்.
வீட்டுக் காவல், தெருக்காவல் இவை இரண்டிற்காக ஈட்டி வாள் முதலியவை,
இவற்றை அளவு கடந்து பெருக்கும் முயற்சி ஆகிய எல்லாம் குறைந்திருக்கும்;
உண்டுவாழ உணவைச் சேர்க்கத் தொடங்கிய முயற்சி ஒருவரை ஒருவர்
கொன்று வாழும் கொலைக் கருவிகள் செய்யும் கதையாக முடிந்திருக்காது.