பக்கம் எண் :

8அறமும் அரசியலும்

      ஆனால், சிலர் வேறு வழியில் முயற்சி செய்து பார்க்கின்றார்கள்.
அவர்கள் நம்பிக்கையும் வேறுபட்டதாக இருக்கின்றது. பெரும்பாலான மக்கள்
உழைக்கப் பிறந்தவர்கள் என்றும், அவர்களை ஆளும் அரசியலைக்
கைப்பற்றுவதே தம் கடமை என்றும், தாம் ஆட்சி புரிந்தால்தான் போரையும்
குழப்பத்தையும் ஒழித்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும், தம்
முயற்சிக்குத் தடையாக, நிற்பவர்கள் உள்ளே இருந்தாலும் வெளியே
இருந்தாலும் அவர்களை அடக்குவது அல்லது அழிப்பதே அறம் என்றும்
நம்புகின்றார்கள்.

     உலகம் நாடு நாடாகப் பிரிந்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சாரார்
கையில் சிக்குண்டு இந்த நிலைமையில் இருந்து வருகின்றது. விஞ்ஞான
வளர்ச்சியில் யந்திரங்கள் பெருகியவுடன் விரைவான மாறுதல் ஏற்பட்டு
வருவதாயிற்று. பெரிய பெரிய கைத்தொழில் நிலையங்களும் போக்கு வரவுக்
கருவிகளும் வியாபார அமைப்புக்களும் தனித்தனியே சேர்த்துவைக்கும்
ஆற்றலை மிகுதிப்படுத்தி விட்டன. அதற்கு அடுத்தாற்போல், போர்
முறையிலும் சிற்சிலரையோ சிறு கூட்டத்தையோ அழிக்கும் கருவிகள், இருந்த
இடம்போய் கோடிக்கணக்கான மக்களையும் ஊர் ஊராகப் பெரிய பெரிய
நிலப்பகுதியையும் சில நொடிகளில் அழிக்கவல்ல அணுக்குண்டுகளும் பிற
கருவிகளும் வளர்ந்துவிட்டன. சேர்த்துவைக்கும் ஆற்றல் மிகுந்த காரணத்தால்
வறுமைத் தொல்லை முன்னிலும் பன்மடங்கு தெளிவாக விளங்கிவிட்டது.
அழிக்கும் ஆற்றல்மிகுந்த காரணத்தால், தனித்தனியாக ஒரு சிலர்
அறநெறியில் வாழ்வதால் பயனில்லை என்பதும் விளங்கிவிட்டது.