பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 9

     விஞ்ஞான வளர்ச்சியும் யந்திரப் பெருக்கமும் இன்னொரு பெரிய
மாறுதலைச் செய்திருப்பதை மறக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் சிற்சிலர்
தாம் மட்டுமே ஆளப் பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லோரும் உழைக்கப்
பிறந்தவர்கள் என்று எண்ணி வந்தார்கள். எண்ணி வருகின்றார்கள். அவர்கள்
எண்ணத்தில் இடிவிழுந்துவிட்டது. உழைத்து உழைத்து வியர்வை சிந்தும்
தொழிலாளிகள் தலை நிமிர்ந்து "நாங்களும் ஆளப் பிறந்தவர்களே; என்று
வாய் திறந்து கூறத் தொடங்கினார்கள். சில நாடுகளில் தொழிலாளர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அமைச்சர்களாகி ஆட்சியும் புரிகின்றார்கள்.

     இதற்குக் காரணம் என்ன? பழங்காலத்து உழைப்பு கைகால்களின்
உழைப்பு; மணிக்கணக்காக உடம்பால் உழைக்கும் உழைப்பு; ஆகையால்
மூளை வளர்ச்சிக்கு இடம் தராத உழைப்பு. மென்மையான உடம்பில் மட்டுமே
மூளை வளரும் என்பதும், விலங்குபோல் உழைத்து முரட்டுத் தன்மை பெற்ற
உடம்பில் மூளை நுட்பமாக வளராது என்பதும் அறிஞர்கள் கண்ட முடிவு
அல்லவா? ஆகையால் பழங்காலத்தில் உழைப்பாளிகள் எண்ணும் ஆற்றல்
இல்லாமல் ஆடுமாடுபோல் அடங்கி வாழ முடிந்தது. யந்திரங்கள் வந்த பிறகு,
மக்கள் உடம்பில் அவ்வளவு வியர்வை சிந்த வேண்டியதில்லை; யந்திரங்களை
இயக்கவும் ஓரளவு துணை செய்யவும் தெரிந்து கொண்டு மென்மையாக
உழைத்தால் போதும். ஆகையால், இந்தக் காலத்து உழைப்பாளிகளுக்கு
மூளை வளர்ச்சிக்கு இடம் இருக்கின்றது. ஆகவே பல காரணங்களை
நயமாகவும் தந்திரமாகவும் மற்றவர்கள் கூறினாலும் அவர்கள் நம்புவதில்லை.
எண்ணிப் பார்க்கத் தொடங்குகின்றார்கள். "உழவுக்கும் தொழிலுக்கும்