அல்லல்பட்டால் பயனிருக்காது. ஆகையால் நல்லதைச் செய்யுங்கள் நல்லது விளையும்", என்று எடுத்துரைத்தார்கள். இந்த உண்மையை உணர்ந்து ஊழை மதிக்கத் தொடங்கினால், குறுகிய நோக்கம் ஒருவாறு ஒழியும். இன்றே வெற்றி பெற வேண்டும். அதற்காக என்ன தீமையாவது செய்ய வேண்டும் என்னும் தன்னலமும் தகாத செயலும் இல்லாமல் காத்துக் கொள்ளலாம். இன்று தோல்வி வந்தாலும் வரட்டும், இடர் வந்தாலும் வரட்டும் நாளை வாழ்வு சீர்ப்படும் என்னும் பொறுமையும் நம்பிக்கையும் வளரும். மெல்ல மெல்லக் காலங்கடந்து நோக்கும் பரந்த நோக்கம் பெறலாம். இந்த நல்ல நோக்கத்தோடு தான் முன்னோர்கள் ஊழை விளக்கினார்கள். அதன் வழியாக அறத்தின் பெருமையை விளக்கிப் பரந்த நோக்கம் கொள்ளச் செய்தார்கள். ஆனால் முன்னோர்கள் ஊழைப்பற்றி விளக்கியபோது, காலத்தால் பரந்த நோக்கத்தை மட்டுமே விளக்கினார்கள். அதாவது, இன்று என்று வரையறைப்படுத்தித் தன்னலத்தால் நோக்கும் நோக்கத்தைக் கடந்து நேற்றைய வாழ்வின் தொடர்பையும் நாளைய வாழ்வின் அமைப்பையும் எண்ணச் செய்தார்கள். இது மட்டும் போதாது; காலத்தால் பரந்து நோக்கி எதிர்காலத்தை உணர்வது மட்டும் போதாது. இடத்தாலும் பரந்து நோக்கும் நோக்கம் வேண்டும். இன்றைய வாழ்வுக்கு மற்றக்காலங்கள் எவ்வளவு தொடர்பாக அமைந்திருக்கின்றனவோ, அவ்வாறே இந்த ஓர் உடம்பின் வாழ்வுகளும் தொடர்பானவை; ஒன்றுக்கு ஒன்று காரண காரியமாக அமைந்தவை. ஒரு குடும்பத்தின் வாழ்வுக்கு மற்றக் |