பக்கம் எண் :

70அறமும் அரசியலும்

குடும்பங்களின் வாழ்வும் காரணமாக இருக்கின்றது. ஒரு வகுப்பாரின்
வாழ்வுக்கு, ஓர் இனத்தாரின் வாழ்வுக்கு, மற்ற வகுப்பு இனங்களின் வாழ்வும்
காரணமாக இருக்கின்றது. ஒரு நாட்டின் வாழ்வுக்கு மற்ற நாடுகளின் வாழ்வும்
காரணமாக இருக்கின்றது. இவ்வாறு உலகமெல்லாம் ஒருவகையாகப்
பிணைக்கப்பட்டு ஒரு பகுதியின் நன்மை தீமைகளுக்கு மற்றப் பகுதிகளின்
நன்மை தீமைகள் காரணமாக இருக்கின்றன. இதை உணர்வதே இடத்தால்
பரந்த நோக்கம் ஊட்டுவதாகும்; இதுவே ஊழ் இடம்பற்றி ஆட்சி புரியும்
பகுதியாகும்.

     இந்தப் பகுதியை முன்னோர்கள் அவ்வளவு தெளிவாக விளக்கவில்லை.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவ்வாறு விளக்கவேண்டிய காரணம்
எழவில்லை. காலத்தின் தொடர்பால் வாழ்க்கை மாறி அமையும் நிலைமை
அவர்கள் வாழ்ந்த போது இருந்தது. ஆனால், இடத்தின் தொடர்பால்
அமையும் நிலைமை இல்லை; ஒரு நாட்டு வாழ்க்கையால் மற்றொரு நாடு
மாறி அமையும் நிலைமை இல்லை; இன்று உள்ள அவ்வளவு இல்லை.
முன்கண்டவாறு, அந்தக் காலம் தனி மனிதர் வாழ்க்கையும் குடும்ப
வாழ்க்கையும் இன வாழ்க்கையும் விளங்கிய காலம்; காலால் நடக்கும்
நிலையும், மாட்டுவண்டிப் பயண நிலையும், குதிரை வண்டிப் பயண நிலையும்
இருந்த காலம். நாட்டுக்கு நாடு தொடர்பு பட்டு உலகமெல்லாம் ஒரு சேரப்
பிணைக்கப்பட்ட வாழ்க்கை - புகைவண்டிப் பயண நிலை - அந்தக்
காலத்தில் இல்லை. ஆகையால் முன்னோர்கள், காலத்தால் பரந்த ஊழ்ப்
பகுதியைத் தெளிவாக விளக்கினார்கள்; இடத்தால் பரந்த ஊழ்ப் பகுதியை
அவ்வாறு விளக்கவில்லை.