பக்கம் எண் :

அறத்தின் ஆட்சி 71

குடும்ப வாழ்க்கை நன்றாக அமைந்து சீரெய்திய காலம் ஆகையால், குடும்ப அளவில் அந்த ஊழ்ப் பகுதியை விளக்கியிருக்கின்றார்கள். ஒருவன் செய்யும் நல்வினை அவனுக்கே அல்லாமல் அவனுடைய குடும்பத்தாருக்கும் நன்மை செய்யும் என்றும், ஒருவன் செய்யும் தீவினை அவனையும் கெடுத்து அவனுடைய குடும்பத்தையும் சாரும் என்றும் முன்னோர்கள் ஒருவாறு விளக்கியிருக்கின்றார்கள். இது அந்தக் காலத்திற்குப் போதும். குடும்ப வாழ்க்கை என்பது இன வாழ்க்கையாய்ப் பரந்து எல்லை கடந்து உலகக் குடும்பமாய் விரிந்துள்ள இந்தக் காலத்திற்கு அது போதாது. அந்தக் காலத்தில் தம் குடும்பத்தின் அளவில் நின்று தம் முயற்சியால் வீடு கட்டி, தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் உடை முதலியவற்றையும் தாமே செய்து கொள்ளும் நிலைமை இருந்தது. தம் சிற்றூரில் கிடைக்காத உப்பு முதலியவற்றையும் பண்டமாற்று மூலமாகவே பெற்றுக் கொள்ள முடிந்தது. மற்ற ஊர்களின் உதவியையும் மற்ற நாடுகளின் உதவியையும் அவர்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. இந்தக் காலத்திலோ, மற்ற ஊர்களின் உதவியும் மற்ற நாடுகளின் உதவியும் இல்லாமல் தனி ஒருவன் தனக்கு வேண்டிய உணவு முதலியவை பெற்று வாழ முடியாது. இந்தக் காலத்து மனிதன் குடும்பத்தில் பழகும் அளவுக்கு ஏறக்குறைய உலகத்திலும் பழகுகின்றான். குடும்பம் என்ற சிறிய எல்லை விரிந்து விரிந்து உலகம்