பக்கம் எண் :

72அறமும் அரசியலும்

என்ற பெரிய எல்லையை அணுகி வருகின்றது எனலாம். அல்லது, உலகம்
என்ற பெரிய எல்லை சுருங்கிச் சுருங்கிக் குடும்பம் என்ற சிறிய எல்லையை
நெருங்கி வருகின்றது எனலாம். இன்றைய வாழ்க்கையில் குடும்பம் ஓர்
உலகமாக உள்ளது; உலகமும் ஒரு குடும்பமாக உள்ளது.

வினை விளைவு

     தனியே நின்று ஒத்த இருவர் செய்யும் பழங்காலத்துப் போர் போன்றது
அந்தக் காலத்து ஊழ்வினை விளைவு. கூடி நின்று பலர் செய்யும் போர்
போன்றது, இந்தக் காலத்து ஊழ்வினை விளைவு. தனியே விதைத்துத் தனியே
அறுப்பது அந்தக் காலத்து முறை. கூட்டமாகக் கூடி விதைத்துக் கூடி
அறுப்பது இந்தக் காலத்து முறை. இன்று ஒவ்வொருவர் எண்ணத்திற்கும்
செயலுக்கும் அவருடைய சூழ்வு - சுற்றுப்புற உலகம் - காரணமாக
இருக்கின்றது. ஒவ்வொருவர் செய்யும் நன்மை தீமையிலும் உலகம்
முழுமைக்கும் பங்கு இருக்கின்றது. எங்கோ விளையும் மண்ணெண்ணெய்
உலகம் முழுமைக்கும் பயன்படுவது போல, எங்கோ நடக்கும் போர் உலகம்
முழுமைக்கும் அல்லல் விளைப்பது போல, எவரோ எந்த நாட்டிலோ
செய்யும் நன்மை தீமைகள் எல்லார்க்கும் எல்லா நாட்டுக்கும் உரியவை
ஆகின்றன. இட்லர் செய்த செயல்களும் உலகத்தைத் தாக்கின. காந்தியடிகள்
ஆற்றிய தொண்டுகளும் உலகத்தைத் தாக்கின. இவர்கள் செல்வாக்கு
மிகுந்தவர்கள்; ஆகையால் ஆற்றல் மிக்க தீமை நன்மைகளை
விளைத்தார்கள். செல்வாக்குக் குறைந்த வேறு வேறு நாட்டு உழவர்களும்
தொழிலாளர்களும் தம் தம்மால் இயன்றதைச் செய்து