கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் செயல்களும் ஓரளவு நன்மை தீமைகளை உலகத்திற்குப் பொதுவாக விளைத்துக் கொண்டிருக்கின்றன. இன்றும் தனி மனிதனாய் ஒருவன் செய்யும் செயல் அவனுக்கே தனியாக விளைந்து நன்மை அல்லது தீமை செய்கின்றது. “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்பது இன்றைக்கும் உண்மையாகவே உள்ளது. அது போலவே, குடும்பத்தைச் சார்ந்து குடும்பத்திற்காக ஒருவன் செய்யும் வினை அந்தக் குடும்பத்தைத் தாக்குகின்றது. இனத்தை சார்ந்து இனத்திற்காகச் செய்யும் நல்வினை தீவினையும் இவ்வாறே அந்த இனத்தைத் தாக்குகின்றன. நாட்டைச் சார்ந்து நாட்டிற்காகச் செய்யும் நன்மை தீமையும் இவ்வாறே பயன் விளைக்கின்றன. இனி வருங்காலத்தில், இவை எல்லாவற்றையும்விட உலகத்தைச் சார்ந்த நன்மை தீமைகளாகவே பல செயல்களும் பயன் விளைக்கும். அகப்பற்றும் புறப்பற்றும் ஒருவன் விடும் மூச்சு உலகத்தில் பரந்து உலவும் காற்றோடு கலந்து உலகத்தார் அனைவரையும் ஓரளவு தாக்குகின்றது அல்லவா? அவன் விடும் மூச்சில் நோய் பரப்பும் நுண்ணுயிர் இருந்தால் அவை எங்கும் கலந்து மற்றவர் உட்கொள்ளும் மூச்சில் புகவில்லையா? ஒருவன் தனியே இருந்து புகைக்கும் நறுமணம் அவ்வாறே எங்கும் |