பக்கம் எண் :

74அறமும் அரசியலும்

கலந்து எவர்க்கும் பொதுவாகின்றது. உலகத்தில் உள்ள தட்பவெப்பங்களும்
அந்த அந்த இடங்களுக்கே சிறப்பாக உரியவை ஆயினும், பொதுவாக
உலகத்தில் உள்ள எல்லாப் பகுதிகளையும் ஓரளவு தாக்குகின்றன. மக்களின்
எண்ணங்களும் செயல்களின் பயன்களும் இவற்றைவிட நுட்பமானவை;
ஆற்றலுடையவை; ஆகவே உலகத்திற்குப் பொதுவாக உலகமெல்லாம்
பரவக்கூடியவை.

     இவ்வாறு 'நான்' என்ற தனி எண்ணத்தை (அகங்காரத்தை) 'எனது'
என்ற தனி உரிமையை (மமகாரத்தை)யும் குறுகிய நோக்கம் என்று ஒழித்து,
எல்லாம் ஆன பரம்பொருளையும் எல்லாம் கடந்த கடவுள் தன்மையையும்
பரந்த நோக்கமாக வற்புறுத்த எழுந்த உயர்ந்த கொள்கையில் பிறந்ததே
ஊழ் என்பதாகும். ஆனால், குறுகிய நோக்கமுடைய மனிதன்-தன்னலம்
உடைய மனிதன்-அந்த ஊழையும் தன் குறுகிய நோக்கத்திற்கும்
தன்னலத்திற்கும் பயன்படுத்தி வருகின்றான். எப்படியாவது பொருள் சேர்த்து
வைத்துக்கொண்டு, தன் ஒருவனுடைய நல்வினையால் சேர்ந்த பொருள்
என்றும், தன் ஒருவனுக்கே உரியபொருள் என்றும், அகப்பற்றும் புறப்பற்றும்
(அகங்காரம், மமகாரம்) கொண்டு நாத்திகனாக நடக்கின்றான். மனச்சான்று
தன்னோடு போராடும் போது, ஏதேனும் இரண்டு உதவியும் அருச்சனையும்
செய்துவிட்டு, அவை தான் செய்தவை என்றும், அவற்றின் பயன் தனக்கே
உரியவை என்றும் நாத்திக நெறியிலேயே நம்பி மயங்கி மனச்சான்றை
அடக்கிவிட முயல்கின்றான். இவையெல்லாம் அறநெறிக்கு முற்றிலும்
மாறுபட்டவை. குறுகிய நோக்கத்தை ஒழிக்கப் பிறந்த ஊழ் குறுகிய
நோக்கத்தை வளர்க்கப்