பக்கம் எண் :

93

என்றும், அவனுக்கு மட்டும் அந்தப் புண்ணியத்தில் தனி உரிமை இல்லை
என்றும் கருத வேண்டும். காந்தியடிகள் போன்ற பெரியோர்கள் பாவம்
செய்தவர்களைக் கண்டு இரக்கம் கொண்டதற்கும், தாம் செய்த
நற்செயல்களைப் பற்றிப் பெருமை கொள்ளாததற்கும் இந்த அறஉணர்வு
இருந்ததே காரணமாகும்.

     பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த பூங்குன்றனார், வாழ்க்கையில் அறத்தின்
முறை ஒன்றையே மதித்து வாழ்ந்த சான்றோர்; "ஆருயிர் முறைவழிப் படூஉம்
என்பது தெளிந்தனம்", என்று தாம் தெளிந்த தெளிவை எடுத்துக் கூறி
வற்புறுத்தினார். அதனால் வாழ்க்கையின் பெருமை சிறுமைகளைத் தனித்தனி
மனிதர்க்கு ஏற்றிக் கூறுவது பொருந்தாது என்று விளக்கினார்; அறத்தின்
முறையே பெருமையுடையது என உணர்ந்துதான், "பெரியோரை வியத்தலும்
இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று உலகுக்கு
உணர்த்தினார். அவருடைய தெளிவும் துணிவும் உலக மக்களுக்கு இருந்தால்,
இன்று உள்ள எவ்வளவோ தொல்லைகளைத் தீர்க்க முடியும்.