பக்கம் எண் :

10 இலக்கிய ஆராய்ச்சி
 
     ஒரு வகையில் விழிப்போடு இருக்க வேண்டும். ஓர் இலக்கிய நூலின் வரலாற்றை
ஆராய்வதில் பெரும்பாலும் கருத்தொற்றுமைக்கு இடம் உண்டு; ஆராய்ச்சி
உண்மையானால் ஒன்றாகவே இருக்கும்; பொய்ப்படும் போது இரண்டு மூன்று
வகையாகலாம்; அவ்வளவே. அதன் சொற்பொருள் நுட்பங்களை விளக்குவதிலும்
பெரும்பாலும் ஒற்றுமையே காணப்படும். வேறுபாடு தோன்றினும் சிறு பான்மையே.  
 
     ஆதலால் இடர்ப்பாடு இல்லை! ஆயின், இலக்கிய அனுபவத்தைக் காணும்
ஆராய்ச்சியில் வேறுபாடுகள் பெருக இடம் உண்டு. இலக்கிய ஆசிரியரே தன்
அனுபவத்தை ஓரளவு தான் சொற்களால் வடித்திருக்கிறார்; அதைக் கற்கும் அறிஞர்
அந்தச் சொற்களைக் கடந்து ஆராயும் போது தன் சொந்த அனுபவத்தையே வழி
காட்டியாக அழைத்துச் செல்கிறார். ஆகையால் ஆராயப் புகுவோரின் அனுபவமே முன்
நின்று வழிகாட்டுகிறது. ஆராய்வோரின் உணர்வு பலதிறப்படுவதால், அவர்களின்
அனுபவம் பல வகைப்பட, அதனால் இலக்கிய ஆராய்ச்சியும் பலவாறு வேறுபட்டுத்
தோன்றும். 
 
     இலக்கிய ஆராய்ச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும்.
ஒரு புலவரின் சிறப்பு என்று ஒருவர் கருதுவதையே புலவரின் குறை என்று
மற்றொருவர் கருதுமளவிற்கும் வேறுபாடு காணப்படும். இத்தனைக்கும் ஒருநாடு
இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும்.
வேறு வழி இல்லை. மல்லிகையின் மணத்தை அனுபவிக்கும் மூக்கு எல்லாக் காலத்திலும்
எல்லார்க்கும் ஏறக்குறைய ஒரே தன்மையாக இருப்பதால், மல்லிகைப் பந்தலின் கீழ்
நின்று பெறும் அனுபவம் ஒத்திருக்கின்றது. ஆனால் மக்களின் உள்ளம் எத்தனையோ
காரணங்களால் எத்தனையோ வகையாக நாகரிகத்தின் பெயரால் வளர்ந்து