வேறுபட்டிருப்பதால், இலக்கிய உலகில் பெறும் அனுபவத்தில் ஒற்றுமை காண்பது அருமை. | ஆயினும் ஆறுதலுக்கு இடம் உண்டு. அரைகுறையாகக் கற்றவர்களிடையே எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், கற்றுத் தேர்ந்தவர்களிடையே அவ்வளவு வேறுபாடு காணோம்; உயர்ந்த கலைஞர்களிடையிலும் அவ்வளவு வேறுபாடு காணோம். அதனால்தான், எந்த நாட்டில் எந்தக்காலத்தில் எந்தச் சூழலில் தோன்றியவர்களாக இருந்தாலும் உயர்ந்த கலைஞர்கள் ஒரே தன்மை உடையவர்களாகத் தோன்றுகிறார்கள். கபிலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, வால்மீகி, காளிதாசர், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, புஷ்கின், தாகூர் முதலானவர்கள் இடம், காலம், சூழ்நிலை முதலிய வேறுபாடுகளைக் கடந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். ஆராய்ச்சியாளர்களும் அவர்களைப் போல் உயர்ந்தவர்களாக, உயர்ந்த உள்ளம் பெற்றவர்களாக இருந்தால், அவர்களிடையே ஓரளவு ஒற்றுமை காணப்படும்; அவர்கள் பெறும் இலக்கிய அனுபவம் ஏறக்குறைய ஒரே வகையாக இருக்கும்; அவர்கள் எழுதும் ஆராய்ச்சி நூல்களும் பொதுவான அனுபவத்தைக் கூறும் நூல்களாக இருக்கும். இந்த அளவிற்கு ஒற்றுமை போதும்; இதைக் காணும் திறன் தான் வேண்டும். | | |
|
|