பக்கம் எண் :

  2. வரலாறும் காவியமும்
 
     ஓவியம் தீட்டுதல் ஒரு கலை; நிழற்படம் (Photo) எடுத்தலும் ஒரு கலையே.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? நிழற்படம் எடுப்பவன், உலகத்தில்
நிகழ்வதையே படம் பிடிக்க முடியும்; நிகழக்கூடியதைப் படம் பிடிக்க முடியாது;
நிகழமுடியாததையும் படம் பிடிக்க முடியாது. ஆனால் ஓவியக் கலைஞன் உலகில்
நிகழ்வது, நிகழக் கூடியது, நிகழ முடியாதது ஆகிய மூவகைப்பட்டவற்றையும்
கலையுருவாக்கிக் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக: வேங்கை மரத்தில் மயில்கள்
இயற்கையாக இருந்து மகிழ்வது உண்டு. அந்த இயற்கைக் காட்சியை நிழற்படம்
எடுத்துக் காட்ட முடியும். ஆனால், ஓவியக் கலைஞன் விரும்பினால், வேங்கைமரத்தில்
மயில் மகிழ்வதையும் காட்ட முடியும்; அன்றித் தென்னை மரத்தில் மயில் ஆடுவதாகத்
தீட்டவும் முடியும். அவ்வாறு தென்னைமரத்தில் மயில் ஆடுவதாகக் காட்ட
முயலும்போது, அந்தக் கலைஞன் வாழ்க்கையோடு ஒட்டிய கற்பனைக் கலையைப்
போற்றும் செம்மைமனம் உடையவனானால், அந்தத் தென்னைமரத்தையே
குட்டையாக்கியோ முடமாக்கி வளைத்தோ மயில் ஏறி ஆடக் கூடியதாகச் செய்வான்.
வாழ்க்கையோடு ஒட்டாத போலிக் கற்பனையைப் போற்றும் மனம் உடையவனானால்
அவன் நெடுக வளர்ந்த உயர்ந்த தென்னைமரத்திலும் மயில் ஏறி ஆடுவதாகப் படம்
வரைய முனைவான்;