பக்கம் எண் :

வரலாறும் காவியமும்

13

 
     நிழற்படத்திற்கும் ஓவியத்திற்கும் உள்ள இந்த வேறுபாடுதான் வரலாற்றுக்கும்
காவியத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும். 
 
     வரலாறு உள்ளதைக் கூற ஏற்பட்டது. காவியமோ உள்ளதைக் கூறுவதும் உண்டு;
உள்ளதைப் புனைவதும் உண்டு; இல்லதைப் புனைவதும் உண்டு. கற்பனையுலகில்
பறக்காமல் உணர்ச்சி மிகாமல் ஒரு பற்றும் இல்லாமல் எழுத வல்லவரே வரலாறு எழுத
முடியும். கற்பனையுள்ளம் படைத்தவர் வரலாறு எழுதப் புகுந்தாலும் அது காவியமாக
மாறும்; கலையுணர்ச்சி இல்லாதவர் காவியமே எழுதப் புகுந்தாலும் அது வரலாறு போல்
நிற்கும். 
 
     பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரியோர்கள் வரலாறுகள் எழுதிவைக்காதது
பெருங்குறை என்று இன்று பேசப் படுகின்றது. அது உண்மைதான். ஆனால், அவர்கள்
என்ன செய்திருக்க முடியும்? அணியும் அணிகலன், உடுக்கும் உடை, ஆளும் கருவி,
கட்டும் வீடு, உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லாவற்றிலும் கலையையே கண்டு
கலையையே வாழ்வித்த பழந்தமிழ் மக்கள் வரலாற்றுத் திறன் இல்லாமல் வாழ்ந்ததில்
வியப்பில்லை. பழந்தமிழ் மக்களின் மனம் கலையுலகில் பறக்கும் பறவையாக இருந்தது;
உலக நிகழ்ச்சிகளிலேயே ஊன்றி வேர்கொண்டு நிற்கவில்லை. பல நூற்றாண்டுகள்
கழித்துத் தமிழ்நாட்டு அரசியலில் களேபரம் நிகழ்ந்து, வாழ்க்கையில் கலக்கம் ஏற்பட்ட
பிற்காலத்தில்தான் கலையுலகப் பறவை தன் வானத்தை விட்டு நிலம் நோக்கி வரத்
தலைப்பட்டது; சிற்றூர்களின் நடைமுறைகளையும் கல்லில் பொறித்து வைக்கும் வழக்கம்
ஏற்பட்டது; அவ்வாறு அமைந்துள்ள கல்வெட்டுக்களே தமிழ் நாட்டுத் தொன்மையான
வரலாற்றுப் பகுதிகளாகக் கூறப்படுகின்றன. 
 
     தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல், இவ்வுண்மை எல்லா நாட்டுக்கும் ஓரளவு
பொருந்தும், பிறரோடு