பக்கம் எண் :

14 இலக்கிய ஆராய்ச்சி
 
பழகுவதில் மிக வல்லவராய் உள்ளத்தில் உள்ளதை மறைத்து, உணர்த்தத் தக்கதை
மட்டும் பேச வல்லவராய், ஆளும் வகையில் தேர்ந்தவராய் விளங்கும்
ஆங்கிலேயர்க்கும் இது ஓரளவு பொருந்துகின்றது. ஏன்? அவர்களாலும்
கலையுள்ளத்தை அடியோடு துறக்க முடியவில்லை. மெக்காலே என்னும் ஆங்கிலேய
அறிஞர் எழுதிய ஆங்கில நாட்டு வரலாறு, பெயர் பெற்ற வரலாற்று நூலாகும். அதைப்
பற்றியே ஒருவர், "படிக்கத் தக்க புனைகதை ஒன்று வேண்டுமென்று கேட்டால்,
மெக்காலே எழுதிய வரலாறு படிக்கலாம்" என்றார். வரலாறு என்று எழுதப்பட்ட
இக்காலத்து நூலின் நிலைமையே இது என்றால், அறிவு வளர்ச்சியைப் பெரிதாகப்
போற்றாமல் உள்ளப்பண்பாட்டையே பெரிதாகப் போற்றிய பழந்தமிழ்க் கலைஞர்கள்
தமிழ் நாட்டு வரலாறு எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? வரலாறாக நிற்காமல்
காவியமாக மாறியமைந்திருக்கும் அன்றோ? 
 
     இதற்கும் ஒரு சான்று வேண்டுமா? புறநானூறு என்னும் சங்ககாலத் தொகைநூலில்
உள்ள பாடல்களில் பெரும்பாலானவை வரலாற்றுப் பகுதிகளே. அவை இன்று
வரலாறாக நின்றுள்ளனவா? இல்லை; சிறந்த கலைச் செல்வங்களாக வாழ்கின்றன. 
 
     நீண்டுயர்ந்த தென்னைமரத்தின்மேல் மயில் ஆடுதல் போன்ற இல்லது புனைதல்
புறநானூற்றில் இல்லை. குறுகிய முடத் தென்னையின்மேல் மயில் ஆடுதல் போன்ற
உள்ளது புனைதல் புறநானூற்றில் உண்டு. வேங்கை மரத்தின்மேல் மயில்
மகிழ்ந்திருத்தல் போன்ற உண்மை நிகழ்ச்சிகளும் புறநானூற்றில் பல உள்ளன.
ஆகையால் தமிழ்நாட்டுப் பழைய வரலாறு இல்லையே என்று வருந்துவோர்,
உண்மையை உள்ளவாறு அல்லது சிறிதளவு