பக்கம் எண் :

வரலாறும் காவியமும் 15
 
புனைந்து கூறும் பாடல்கள் உள்ளன என்பதை எண்ணி மகிழலாம். 
 
     அந்நிலையிலும் ஒரு குறை தோன்றும். இந்தப் பாண்டியன் இன்ன ஆண்டில்
பிறந்தான், இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தான், இன்ன ஆண்டில் உயிர் நீத்தான்
என்னும் குறிப்புகள் இல்லாதபோது அது வரலாற்றுக்கு உதவுமோ என்று தயங்கலாம்.
வரலாறு என்பது தனி மனிதன் ஒருவனுடைய பிறப்பு, வாழ்வு, இறப்பைப் பற்றிக்
கூறுவது என்னும் கருத்துடையவரின் போக்கு அது. அரசனே ஆயினும் அவன்
தனிமனிதனே; அந்தத் தனி மனிதனுடைய வாழ்வைவிட, அவனுடைய ஆட்சியில்
இருந்த நாட்டின் நிலைமையைத் தெரிவிப்பதே உண்மை வரலாறு என்று புத்துணர்வு
பெற்றவர் புறநானூற்றைக் கற்று மகிழ முடியும். 
 
     ஆம், வரலாறு என்பது நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் கூறுவது;
புறநானூற்றில் அவ்வாறு இல்லையே. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிற்சில
நிகழ்ச்சிகளையே பாடியுள்ளனரே, இது குறையன்றோ எனக் கேட்கலாம். இதுவும் ஒரு
குறையே! ஆயின், மிகச் சிறு குறை. நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்
பிற்காலத்தார் அறிவதால் பயன் இல்லை; நிகழ்ச்சிகளுள் புதியன, சிறந்தன, மாறியன
மட்டும் அறிந்தால் போதும். எல்லாவற்றையும் காட்டுவது நிழற்படம்; வேண்டியவற்றை
மட்டும் காட்டுவது ஓவியம். வேங்கைமரத்தையும், மயிலையும் பசும்புல் தரையையும்
பின்னணியான மலையையும் மட்டும் தீட்டுவர் ஓவியக் கலைஞர்; அவர் உயிரும்
உணர்வும் உள்ளவர்; தக்கவாறு அமைத்து அழகுறுத்தும் ஆற்றல் உள்ளவர். நிழற்படம்
உயிரும் உணர்வும் அற்றது. உள்ள எல்லாவற்றையும் காட்டுவது; வேங்கை மரத்தின்
கீழ் எப்படியோ வந்து சேர்ந்துள்ள மாட்டெலும்பையும் படமெடுக்கும்; மற்றவற்றையும்