பக்கம் எண் :

இலக்கிய ஆராய்ச்சி

9

 
பிராட்லி (A. C. Bradley) முதலிய ஆராய்ச்சியாளர்கள் பலர் செய்துள்ள
அருந்தொண்டுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இது ஆங்கில இலக்கிய உலகம்
அடைந்துள்ள சிறந்த நிலையைக் காட்டுகிறது. 
 
     இந்த மூவகை ஆராய்ச்சியும் ஒன்றோடொன்று ஓரளவு தொடர்பு
பட்டிருக்கின்றன. மனிதன் கட்டும் வீடுகளைப் போல் அவை எல்லாம் சுவர்களால்
வரையறுக்கக் கூடிய வகையில் முற்றிலும் பிரிந்து நிற்கவில்லை; காட்டில் இயற்கையாக
வளரும் மரங்களைப் போல் ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன. காவியத்தைக் கற்று
அனுபவ ஆராய்ச்சி செய்கிறவன், அதன் வரலாற்றை அடியோடு மறந்திருக்க முடியாது;
சொற்பொருள் நுட்பங்களையும் அடியோடு புறக்கணிக்க முடியாது. ஓவியக் கலைஞன்
சில வேளையில் நிறத்தின் தன்மையை ஆராய்வது போல், சிற்பக் கலைஞன் சில போது
கல்லின் அருமையைப் போற்றுவது போல் காவியக் கலைஞனும் வேண்டும் போது
வரலாற்றிலும், விளக்கத்திலும் எட்டிப் பார்க்கலாம். ஆனால் அது எட்டிப் பார்க்கும்
அளவாகவே இருக்க வேண்டும். 
 
     அவ்வாறு அல்லாமல், வரலாற்றுத் துறையில் காலூன்றிக் கொண்டு காவிய
உலகில் எட்டிப் பார்த்தால் அது சிறப்பான இலக்கிய ஆராய்ச்சி ஆகாது; சொல்லிலும்
சொற்பொருளிலும் ஆழ்ந்து நின்று காவிய உலகில் எட்டிப் பார்த்தாலும் சிறந்த
இலக்கிய ஆராய்ச்சி ஆகாது. இந்த வேறுபாட்டை உணர்ந்து, இலக்கிய ஆராய்ச்சியைப்
போற்றுவதால் தான், தமிழ்மொழியும் ஆங்கிலம் போல் சிறப்படைய முடியும்.
அப்போது, வரலாறுகளும் உரை நூல்களும் போல் இலக்கிய ஆராய்ச்சி நூல்களும்
தனியே பெருக முடியும்.