பக்கம் எண் :

8 இலக்கிய ஆராய்ச்சி
 
நல்கிய புலவர் உணர்ந்த அனுபவத்தைக் கற்பவரும் உணர முயல வேண்டும். தாயின்
உள்ளம் குழந்தையைக் காணும் கலைஞனுக்கு வருவது அருமையே; ஆயினும் அதை
எட்ட முயல்வதே கடமை. அது போல் காவியம் இயற்றிய புலவரின் அனுபவம்
முழுமையும் கற்பவருக்கு வருவதும் அருமையே; ஆயினும் அதைப் பெற முயல்வதே
காவியம் கற்பதால் பெறத்தக்க சிறந்த பயனாகும். 
 
     வரலாற்று ஆராய்ச்சி, பகுத்தறியும் ஆராய்ச்சி, அனுபவ ஆராய்ச்சி இம்மூன்றும்
எல்லா நாடுகளிலும் உண்டு. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று தலையெடுக்கும்.
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அனுபவ ஆராய்ச்சி சிறந்து நிற்கும் காலமே அந்த
நாட்டின் சிறந்த நிலையாகும். தமிழ்நாட்டில் அதற்கு உரிய அறிகுறிகள் இந்த
நூற்றாண்டில் காணப்படுகின்றன. 
 
     'கவிஞரின் அனுபவம் இன்னது என்று நான் உணர்கிறேன். கற்கின்ற நீங்களும்
உணர்கிறீர்களா?' என்று அறைகூவி அழைப்பது போன்ற இலக்கிய ஆராய்ச்சி நூல்கள்
ஆங்கிலத்தில் பெருகியுள்ளது. 
 
 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
 காமுறுவர் கற்றறிந் தார்.
(திருக்குறள். 399) 
 
என்னும் வள்ளுவர் வாய்மொழியை அந்த ஆராய்ச்சியாளர்களின் தொண்டு
நினைவூட்டுகிறது. அங்கும் வரலாற்று ஆராய்ச்சி உள்ளது; ஓரளவாகத்தான் உள்ளது;
ரிச்சர்ட் (I.A. Richards) போன்றவர்களின் முயற்சியால் பகுத்துணரும் ஆராய்ச்சியும்
உள்ளது; அதுவும் ஓரளவாகத் தான் உள்ளது. ஆனால், கவிஞரின் அனுபவத்தை
எட்டிப் பிடித்துத் தாவிப் பறப்பது போன்ற ஆராய்ச்சி நூல்களே ஆங்கிலத்தில்
மிகுந்துள்ளன; ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்ற வர்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில்
பெரும்பாலானவை இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம்.